விடுதலைப்போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவாவின் 95ஆவது நினைவு நாள் இன்று (ஜூலை23) அனுசரிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு சார்பில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் 95-வது நினைவுநாளையொட்டி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
04.10.1884-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் பிறந்த தியாகி சுப்பிரமணிய சிவா அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் தீவிர ஈடுபட்டார். ஆங்கிலேயரால் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார்.
ஆங்கிலேயருக்கு எதிரான பல்வேறு போராட்டங்களிலும் கலந்து கொண்டார் சிவா. அரசியலையும் ஆன்மிகத்தையும் இணைத்தே நம் தேசத்தின் விடுதலைக்காக போராடியவர்.23.07.1925- ஆம் ஆண்டு தனது 41 ஆவது வயதில் தருமபுரியை அடுத்த பாப்பிரெட்டிப்பட்டியில் காலமானார். அவரது தியாகத்தைப் போற்றுகின்ற வகையில் தமிழ்நாடு அரசு பாப்பிரெட்டிப்பட்டியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைத்து அவருக்குப் புகழ் சேர்த்துள்ளது.
தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் பாப்பிரெட்டிப்பட்டியில் ரூபாய் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் மதிப்பில் பாரத மாதா ஆலயம் அமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மலர்விழி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, மற்றும் அரசு அதிகாரிகள் பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கரோனா!