கரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு நடைபெறவிருந்த பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்த டி20 உலகக்கோப்பைத் தொடரை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் அறிவித்தது.
இதையடுத்து, அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்துவதாக இருந்த டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா நடத்துமா? அல்லது இந்தியாவே நடத்துமா? என்ற பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 7) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டபடி இந்தியாவிலும், 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலியாவும் நடத்தும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரை, 2022ஆம் ஆண்டிற்கு ஒத்திவைப்பதாகவும் ஐசிசியின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.