ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள துடுப்பதியிலிருந்து நேற்றிரவு (செப்டம்பர் 13) சென்னைக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் நபர் ஒருவர் தொடர்புகொண்டுள்ளார். அப்போது அவர், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தான் துடுப்பதியில் இருப்பதாகவும் தன்னை வந்து பார்க்க வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த நபர் துடுப்பதி பழையபாளையத்தைச் சேர்ந்த கெளரிசங்கர் என்பதைக் காவல் துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் சென்னைக் காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஈரோடு சூரம்பட்டி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சூரம்பட்டி காவல் துறையினர் கெளரிசங்கரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் மதுபோதையிலிருந்ததால் போதை மீறி வெடிகுண்டு புரளியை செல்போனில் விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கௌரி சங்கர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கௌரிசங்கர் ஏற்கனவே பெருந்துறை காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்விடுத்து கைதாகி சிறை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.