தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து, காட்டுப்பன்றி, கரடி, மிளா, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் மலையடிவாரத்திலுள்ள கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து பயிர்களை நாசப்படுத்தியதோடு மக்களையும் அச்சுறுத்தி வந்தன.
அதேசமயம் குறிப்பாக பங்களா குடியிருப்பு, சிவசைலம், அழகப்பபுரம், கருத்தப்பிள்ளையூர், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வெளிவரும் கரடிகள் மா, பலா, தென்னை உள்ளிட்டவற்றை நாசப்படுத்தியதோடு குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.
இதுகுறித்து வந்த புகாரையடுத்து வனத்துறையினர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு அதன்மூலம் வன விலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அவற்றைப் பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டன.
இதில் கடந்த இரண்டு மாதங்களில் எட்டு கரடிகள் பிடிபட்டன. மேலும் தொடர்ந்து கரடி நடமாட்டம் இருந்ததால் முதலியார்பட்டியில் உள்ள தனியார் தோட்டத்தில் கூண்டு வைக்கப்பட்டது. இதில் இன்று (ஜூலை 3) அதிகாலை கரடி ஒன்று சிக்கியது. கூண்டில் பிடிபட்ட கரடியை வனத்துறையினர் முண்டந்துறை வனப்பகுதியில் கொண்டு விடுவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.
இதுவரை ஒரே இடத்தில் ஐந்து கரடிகள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடையம் வனச்சரகத்தில் 70 நாள்களில் பிடிபட்ட கரடிகளில் இது ஒன்பதாவது கரடி ஆகும்.