உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஃபின்ச் - வார்னர் ஆகியோர் சூப்பர் ஓப்பனிங் தந்தனர்.
51 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 53 ரன்களில் ஃபின்ச் அவுட் ஆனார்.
இதைத்தொடர்ந்து, கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த வார்னர் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தத் தொடரில் தனது இரண்டாவது சத்தை விளாசினார்.
14 பவுண்டரிகள், ஐந்து சிக்சர்கள் என வானவேடிக்கை நிகழ்த்திய வார்னர் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, வந்த மேக்ஸ்வெலும் அதிரடியாக ஆடினார்.10 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 32 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.
மறுமுனையில், நேர்த்தியாக பேட்டிங் செய்த உஸ்மான் கவாஜா 10 பவுண்டரிகளுடன் 89 ரன்களில் வெளியேறினார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 381 ரன்களை குவித்தது. இதன் மூலம், உலகக்கோப்பை தொடரில் தனது இரண்டாவது அதிக ஸ்கோரை எடுத்து சாதனை படைத்தது.
வார்னர் 166 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்தத் தொடரில் மொத்தமாக 447 ரன்களை எட்டியுள்ளார். இதன்மூலம் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.