புதுச்சேரி மாநிலத்தில் 23 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தடைக்கால நிவாரணம் பெற்றுவந்தனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 500ஆக குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் நிவாரணம் வழங்கப்பட்டது. மீனவர்களில் முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு மீன்பிடி தடைக்காலம் நிவாரணம் வழங்கக்கூடாது எனக்கூறி அதற்கான கோப்புகளை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்காததைக் கண்டித்து 18 மீனவ கிராமங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இன்று (ஜூன் 25) காலை அதிமுக எம்எல்ஏ அன்பழகன் தலைமையில் அக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஸ்கரன், வையாபுரி, மணிகண்டன் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வந்தனர். அங்கிருந்து கருப்புக்கொடி ஏந்தி பதாகைகளை ஏந்தியபடி, ஆளுநர் மாளிகை நோக்கி வந்தனர். அங்கு அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது, ’கண்டிக்கிறோம் மீனவர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் அரசையும், ஆளுநரையும் கண்டிக்கிறோம்’ என பதாகைகளை வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து காவல் துறை சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் மாளிகையில் இருந்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
இதையும் படிங்க:உரிமையைப் பறிக்கும் உத்தரவு: ரத்து செய்யாவிடில் ஆளுநரைக் கண்டித்து போராட முடிவு