தமிழ்நாடு முழுவதும் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த வாரம் கடலூரில் ஒரு சில கிராம மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக மீன்வளத் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவர்களுடைய படகுகளுக்கு சீல் வைத்தனர். இதனால் மீனவர்கள் அலுவலர்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது, இதில் உடன்பாடு ஏற்படாததால் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு 200க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்நிலையில் தற்போது சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை தடை செய்யக் கோரியும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரங்கிப்பேட்டை அன்னங்கோவில், சாமியார் பேட்டை, கிள்ளை, அன்னப்பன்பேட்டை, ரெட்டியார் பேட்டை, பெரியகுப்பம், அஞ்சலிங்கம் பேட்டை, பொன்னன் திட்டு உள்ளிட்ட 32 கிராம மீனவர்கள் சிதம்பரம் அருகே உள்ள சாமியார்பேட்டை பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வாகனங்களில் வந்தனர். பின்னர் படகுகளில் கருப்புக் கொடி கட்டியும், கடற்கரையில் கருப்புக்கொடி ஏந்தியும் சுருக்கு வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.