அக்டோபர் 13ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார். அப்போது லேசான கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று(அக்.25) காலை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவிகள் பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மீன்வளத்துறை ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு நேரில் சென்று, மருத்துவக்குழுவினரிடம் அவரது உடல் நிலை குறித்து விசாரித்து அறிந்தனர். இந்நிலையில், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு 90 விழுக்காடு நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாக, அவர் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.