பாட்னா(பிகார்): பிகார் மாநிலத்தில் இரண்டாம் நாளாக அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிகாரில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடக்கிறது. இத்திட்டத்தை திரும்ப பெறக்கூறி கோஷங்களும் எழுப்புகின்றனர். ஜஹானபாத் ரயில்வே பாதையை மறித்து போராட்டம் செய்தனர். மேலும் பாட்னா- காயா சாலை வழியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும் டயர்களை எரித்து அவர்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ரயில்வே அதிகாரிகள், மாவட்ட காவல்துறையினருடன் சேர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். போக்குவரத்தை மீட்டெடுக்க ரயில் பாதையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர். பாட்னா கயா பிரதான சாலையில் உள்ள காகோ மோர் என்ற இடத்திலும் ஏராளமான போராட்டக்காரர்கள் கூடி டயர்களை எரித்தனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இளைஞர்களின் எதிர்காலத்தை "சமரசம்" செய்வதாக குற்றம் சாட்டி கோஷங்களை எழுப்பினர்.
அக்னிபாத் திட்டம்:பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டம், நான்கு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ராணுவ அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய முன்மொழிகிறது. இருப்பினும், இவர்கள் இறுதி ஓய்வூதிய பலன்களை பெறுவதற்கு நிர்ணயிக்கும் பரிசீலனைக்கு தகுதி பெற மாட்டார்கள். எனவே, அத்திட்டத்திற்கு எதிராக ராணுவத்தில் நாட்டம் கொண்ட இளைஞர்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிகாரின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தியவர்கள் ரயில் நிலையத்தில் இருந்த ரயில் ஒன்றிற்கு தீ வைத்தனர். இதனால் பிகாரில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இது போலவே நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பஞ்சாப், ஹரியான போன்ற மாநிலங்களிலும் இளைஞர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அமைச்சர் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதும் பல சமூக ஆர்வலர்களும் இதனை விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:அக்னிபாத் திட்டம்: அக்னி வீரர் பணிக்கு சேர்வது எப்படி ? எவ்வளவு சம்பளம் ? சலுகைகள் என்ன ?