கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 78 வயதான எடியூரப்பாவிற்கும் பாஜக மேலிடத்திற்கும் உரசல் ஏற்பட்டுள்ளதாகவும், அவரை பதவியிலிருந்து விலக்க முயற்சி எடுக்கப்படுவதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
இதுதொடர்பாக முதலமைச்சர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தனக்கு மாற்று யாருமே இல்லை என நான் கருதவில்லை. டெல்லியில் உள்ள கட்சி மேலிடம் என் மீது நம்பிக்கை வைத்துள்ளது. அதுவரை நான் முதலமைச்சராக தொடர்ந்து பணியாற்றுவேன்.
அவர்கள் வேண்டாம் என்று நினைத்தால், அடுத்த கணமே ராஜினாமா செய்வேன். மாநில வளர்ச்சிக்காக இரவு பகவல் பாரமால் உழைத்து வருகிறேன். மேலிடம் எனக்குத் தந்த வாய்ப்பை மாநில வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறேன்” என்றார்.
குழப்பத்தின் பின்னணி
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பாஜக வந்தப்பின் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்சி, ஆட்சியின் முக்கியப் பொறுப்புகளிலிருந்து ஓரம்கட்டிவைக்கப்படுவதே எழுதாத விதியாக இருந்து வருகிறது.
ஆனால், தென்மாநிலத்தில் பாஜக காலூன்றுவதற்கு அச்சராம் போட்டவர் எடியூரப்பாதான். கர்நாடக மாநிலத்தில் பாஜகவிற்கு ஆட்சி பெற்று தந்த எடியூரப்பா, மாநிலத்தில் தற்போதுவரை அசைக்க முடியாத தலைவராக உள்ளார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மாநிலத்தில் இரண்டாம் கட்டத் தலைவர்களை பாஜக மேலிடம் வளர்த்துவிடத் தொடங்கியது.
மேலும், தேஜஸ்வி சூர்யா போன்ற இளைஞர்களுக்கு தேசிய அளவிலான பொறுப்புகளை வழங்கி எடியூரப்பாவுக்கு செக் வைக்க ஆரம்பித்தது. மேலும், எடியூரப்பாவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சரான யோகீஸ்வரா, ஹூப்ளி எம்.எல்.ஏ. அரவிந்த் பெல்லாட் போன்றவர்கள் அதிருப்தி காட்டி வருவதால் அதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி எடியூரப்பாவுக்கு பாஜக மேலிடம் நெருக்கடி தருவதாகக் கூறப்படுகிறது.
இந்த எடியூரப்பா சர்ச்சைக்கான முற்றுப்புள்ளி எவ்வாறு இருக்கும், இறுதியில் வெல்லப்போவது எடியூரப்பாவா அல்லது பாஜக மேலிடமா என்பதை அரசியல் நோக்கர்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: '9.27 லட்சம் குழந்தைகளுக்கு மோசமான ஊட்டச்சத்து குறைபாடு' ஆர்டிஐ தகவல்!