பஞ்சாப் மாநில போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில மாதங்களுக்கு முன்பு வரையில் வாரிஸ் பஞ்சாப் டி (பஞ்சாப்பின் வாரிசுகள்) என்னும் ஏதோவொரு அமைப்பின் தலைவராக மட்டுமே அறியப்பட்ட அம்ரித்பால் சிங், எப்படி அச்சுறுத்தும் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவராக உருமாறினார்.
இவருக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் முன்பாக சீக்கியர்கள் எதற்காக போராட்டங்களை நடத்துகின்றனர். காலிஸ்தான் என்னும் தனி நாடு கோரி ஆயுதம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு இந்திரா காந்தி அரசால் கொல்லப்பட்ட பிரிவினைவாதி ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலேவுக்கு நிகராக இவர் போற்றப்பட காரணம் என்ன. இப்படி பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறது இந்த "மோஸ்ட் வான்டட் கிரிமினல்"அம்ரித்பால் சிங் தொகுப்பு.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள ஜல்லுபூர் கேரா என்னும் கிராமத்தில் 1993ஆம் ஆண்டு பிறந்தார் அம்ரித்பால் சிங். இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு வரையில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்தார். அதன்பின் துபாயில் உள்ள தனது மாமாவின் போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிய சென்றார். பல ஆண்டுகளாக அங்கேயே இருந்து எப்போதாவது மட்டுமே இந்தியாவுக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். அந்த வகையில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துபாயில் இருந்து இந்தியா திரும்பிய அவர் சீக்கியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதை பிரதானமாக செய்யத் தொடங்கினார். சீக்கியர்களை போல தோற்றத்தை மாற்றத் தொடங்கினார்.
ஆங்காங்கே, வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தார். இதனிடையே வாரிஸ் பஞ்சாப் டி (பஞ்சாப்பின் வாரிசுகள்) என்னும் அமைப்பிற்கு தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த அமைப்பானது பஞ்சாபி நடிகரும், சமூக ஆர்வலருமான தீப் சித்துவால் தொடங்கப்பட்டதாகும். இந்த அமைப்பின் மூலம் தனது ஆதரவாளர்களுடன் பல்வேறு போராட்டங்களில் பங்கெடுக்க தொடங்கினார் அம்ரித்பால் சிங். அதில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டங்களும் அடங்கும். இந்த போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதனிடையே வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பை தொடங்கிய தீப் சித்து 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அந்த அமைப்பின் முழு கட்டுப்பாடும் அம்ரித்பால் சிங்கின் கைகளுக்கு வந்தது. இதையடுத்து அம்ரித்பால் சிங் சீக்கியர்கள் விவகாரத்தில் மும்முரமாக களமிறங்கி அவர்களது கவனத்தையும், ஆதரவையும் பெற்றார். அந்த வகையில் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீக்கிய மத ஊர்வலத்தை நடத்தினார்.
பஞ்சாப் மாநிலத்தில் நிலவி வரும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சாதி ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். இந்த ஊர்வலத்தில் எழுப்பட்ட கோஷங்கள் காரணமாக போலீசாருக்கும் சீக்கியர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போதில் இருந்து போலீசாருக்கு இடையூறு கொடுப்பவராக உருமாறினார்.
இதையடுத்து அமிர்தசரஸில் உள்ள 2 குருத்துவாராவில் அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதனடிப்படையில் அஜ்னாலா காவல் நிலையத்தில் அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்களுக்கு எதிராக ஒருவர் புகார் அளித்தார். அதில் தான் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக குறிப்பிட்டார். இந்த புகாரின் அடிப்படையில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, லவ் பிரீத் சிங் தூபன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவரை விடுவிக்குமாறு அம்ரித்பால் சிங் தனது ஆதரவாளர்கள் உடன் துப்பாக்கி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டார். இதில் காவல் நிலையம் சூறையாடப்பட்டது. பல போலீசார் காயமடைந்தனர். வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த நிலைமையை சரி செய்ய கைது செய்யப்பட்ட லவ் பிரீத் சிங் தூபன் விடுவிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் காட்டுத்தீயை போல பரவி அம்ரித்பால் சிங் பிரபலமடைந்தார். இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தி துப்பாக்கிகள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதனிடையே அம்ரித்பால் சிங் சீக்கியர்களுக்கு தனி நாடு உருவாக வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் பரப்புரையை செய்யத் தொடங்கிவிட்டார்.
அந்த வகையில் சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்பது பேச கூடாத விவகாரம் என்று யாரும் சொல்லக்கூடாது. இது சீக்கிய மக்களின் கருத்தியல் சார்ந்த விவகாரம். முன்பு பிரிட்டிஷ் காரர்களுக்கு அடிமையாக இருந்த சீக்கியர்கள் அடிமையாக இருந்த சீக்கியர்கள் இப்போது, இந்துகளுக்கு அடிமையாகி விட்டனர். இந்த நிலைமை நீடித்தால் இந்திரா காந்தி ஆட்சியில் ஏற்பட்டது. இப்போது ஏற்படும் என்று கருத்து தெரிவித்தார். இதனால் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் இவரை பிந்த்ரன்வாலே 2.O என அழைக்க தொடங்கிவிட்டனர்.
இது மத கலவரத்துக்கு வழிவகுக்கும் என்று போலீசார் இவரையும் இவரது ஆதரவாளர்களையும் கைது செய்ய திட்டமிட்டனர். அந்த வகையில் மார்ச் 19ஆம் தேதி அம்ரித்பால் சிங்கை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். இருப்பினும் அவர் தப்பித்து தலைமறைவானார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கைது நடவடிக்கை காரணமாக பஞ்சாப்பில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் இணை சேவை முடக்கப்பட்டது. சுமார் 80,000 போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும் அம்ரித்பால் சிங் சிக்கவில்லை. இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்கள் லண்டன், சான் பிரான்சிஸ்கோ, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல பகுதிகளில் இருக்கும் இந்திய தூதரகங்கள் முன்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். சில தூதரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆகவே, இந்த விவகாரம் சர்வதேச கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்திய தூதரகம் மீது கல்வீசி தாக்குதல் - மத்திய அரசு கடும் கண்டனம்