தைதராபாத்: இதுவரை யாரும் சென்றிராத நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த ஜூலை 14ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. பூமி மற்றும் நிலவின் சுற்றுப்பாதைக்குள் பல்வேறு கட்ட அடுக்குகளில் நிலைநிறுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது.
இதன் மூலம் சர்வதேச அளவில், நிலவில் சாஃப்ட் லேண்டிங் முறையில் விண்கலத்தை தரையிறக்கிய 4வது நாடு என்கிற பெருமையையும், தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற வரலாற்று சிறப்பையும் இந்தியா பெற்றது. படிப்படிப்பாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது. நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் முதலில் அங்கு ஏற்பட்ட புழுதி காற்றில் நிலை குலையாமல் இருக்க சற்று அமைதியான நிலையில் இருந்தது.
தொடர்ந்து விக்ரம் லேண்டர் தரையிறங்கியதால் நிலவில் இருந்து எழும் புழுதி அடங்கும் வரை விக்ரம் லேண்டர் எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். புழுதி முழுவதும் அடங்கிய பிறகு, விக்ரம் லேண்டரின் மையப் பகுதி மெல்ல திறக்கப்பட்டு அதனுள் இருந்த பிரக்யான் ரோவர் வெளியே கொண்டு வரப்பட்டதாகவும், தற்போது நிலவின் மேற்பரப்பில் உலா வரும் பிரக்யான் ரோவர், அதன் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
இது குறித்து இஸ்ரோ தன் X (ட்விட்டர்) பக்கத்தில், நிலவுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சந்திரயான் 3 ரோவர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. மேலும் இந்தியா நிலவில் உலவி வருகிறது என பதிவிட்டு உள்ளது. விரைவில் அடுத்த பணிகளில் பிரக்யான் ரோவர் ஈடுபடும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
அது என்ன 14 நாள் கணக்கு?: இந்த நிலையில் இஸ்ரோ தன் இணையதளத்தில் விக்ரம் லேண்டரில் இருந்து தரையிறங்கிய ரோவர் எனப்படும் ஊர்திக்கலன் என்ன பணிகளைத் மேற்கொள்ளப்போகிறது என்பதை குறிப்பிட்டுள்ளது. அந்த குறிப்பில் சந்திரனை பொறுத்தவரை 1 நாள் என்பது பூமியில் 28 நாட்களுக்கு சமம். அதாவது 14 நாள் பகல் பொழுதாகவும், 14 நாள் இரவு பொழுதாகவும் இருக்கும்.
இதில் தற்போது விக்ரம் லேண்டர் தரையிறங்கியிருப்பது பகல் 14 நாட்களில் தான். இந்த 14 நாட்களும் இஸ்ரோவின் ஆய்வுகளை இந்த விக்ரம் லேண்டர் மேற்கொள்ளும். இந்த விக்ரம் லேண்டரின் உள்ளிருந்து பிரக்ஞான் ரோவர் வெளியே வந்த நிலையில் இந்த ரோவர் நிலாவில் தான் மேற்கொள்ளப் போகும் ஆய்வுகளையும் அதன் முடிவுகளையும் தகவல்களாக பூமிக்கு அனுப்பும்.
அசர வைக்கும் பிளான் A பிளான் B: எதிர்பாராத விதமாக அந்த தரவுகள் லேண்டர் மூலம் அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டால், மாற்று திட்டமாக சந்திரயான் 2 வின் ஆர்பிட்டர் களம் இறங்கும். இந்த ஆர்பிட்டர் தரையிறங்கி கலனுடன் தொடர்பில் இருக்கும். ரோவரிடம் இருந்து பெறும் ஆய்வு தகவல்களையும் தரவுகளையும் விக்ரம் லேண்டர் மொத்தமாக பூமிக்கு அனுப்பும் அதேவேளையில் அதனை ஆர்பிட்டருக்கும் அனுப்பி வைக்கும். பின் அவை ஆர்பிட்டர் மூலம் பூமிக்கு அனுப்பப்படும். பிளான் ஏ, பிளான் பி என இரண்டும் கைவசம் இருப்பதால் தரவுகளை தவற விடுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.
ரோவர் நிலவில் என்ன செய்ய உள்ளது: இப்போது வெளிவந்து உலவிக்கொண்டிருக்கும் ஊர்திக்கலமான ரோவர், தான் பத்திரமாக தரையிறங்கியதை கூறும் வகையில் விக்ரம் லேண்டரை படம் எடுத்து அனுப்பியுள்ளது. அதே போல விக்ரம் லேண்டரும் பிரக்ஞான் ரோவரை படமெடுத்து அனுப்பியுள்ளது.
26 கிலோ எடை கொண்ட இந்த ரோவர் விநாடிக்கு ஒரு செமீ வேகத்தில் நகரும். இது, தான் செல்லும் வழியில் உள்ள அனைத்து பொருட்களையும் ஸ்கேன் செய்து கொண்டே போகும். அது நிலவில் உள்ள மண் மாதிரிகளை ஆய்வு செய்து அந்த தரைப்பரப்பின் தன்மை, வெப்பம், தண்ணீர் இருப்பு ஆகிய தகவல்களை சேகரித்து அனுப்பும். மேலும், இந்த ரோவர் நிலவின் தரையை குடைந்து அதில் இருந்து மாதிரிகளை எடுத்து, அதனை லேசர் மூலம் உடைத்து நிலவில் என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதை அதனால் கண்டறியும்.
ரோவர் நிலவில் சேகரிக்கும் மாதிரிகளில் இருந்து அங்கு மெக்னீசியம், அலுமினியம், இரும்பு என என்னென்ன தனிமங்கள் உள்ளது எனவும், இரசாயன கலவைகள் குறித்தும், ஹைட்ரஜன் ஆக்சிஜன் போன்றவற்றின் இருப்பு குறித்தும் கண்டுபிடிக்கும். ரோவரில் உள்ள நவீன கருவிக்கு பல்வேறு தனிமங்களைப் பிரித்துப் பார்த்து வகைப்படுத்தக் கூடிய தன்மை உள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் நிலவின் தன்மையை நமக்கு காட்டும்.
மனிதனுக்கு இதனால் பயன் என்ன: இதனை தொடர்ந்து எந்த வகையில் இந்த ஆராய்ச்சி மனிதர்களுக்கு உதவும் என பார்த்தால், வருங்காலத்தில் வேறொரு கிரகங்களுக்கு மனிதர்கள் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டால், அதற்கு தேவையான ஹைட்ரஜன் எரிவாயுவை நிலவில் இருந்தே எடுத்துகொண்டு மீண்டும் மற்ற கிரகத்துக்கு செல்ல முடியுமா என்ற கேள்விக்கு இந்த ஆராய்ச்சி மூலம் பதில் கிடைக்க வாய்ப்புள்ளது.
இது உடனடியாக சாத்தியப்படாமல் போனாலும், இம்முயற்சி ஒரு தொடக்கமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் ஊர்திக்கலனில் இருக்கும் எல்.ஐ.பி.எஸ். (Laser Induced Breakdown Spectroscope), ஏ.பி.எக்ஸ்.எஸ் (Alpha Particle X-Ray Spectrometer) என்ற இரண்டு கருவிகள்தான் இந்த ஆய்வுகள் அனைத்தையும் மேற்கொள்ளப் போகின்றன. இந்த ஆய்வுகள் இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சிக்கும் உதவும் என கூறப்படுகிறது.
பிரக்ஞான் ரோவரில் உள்ள சக்கரங்கள் முன்னோக்கி நகரும்போது, அதன் ஆறு சக்கரங்களும் நிலாவின் தரைப்பரப்பில் இந்தியாவின் நான்முகச்சிங்கம் சின்னம் மற்றும் இஸ்ரோவின் லோகோவை நிலவின் மேற்பரப்பில் பதிய வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
எத்தனை நாட்களுக்கு இந்த பயணம்: சந்திரயான்-3 ன் வேலை எத்தனை நட்களுக்கு நீடிக்கும் என பார்த்தால், முன்னர் கூறப்பட்ட பகல் பொழுதான 14 நாட்கள் மட்டுமே. இந்த இரு வாரங்களுக்கு பின் அடுத்த இரவு பொழுது நிலாவில் தொடங்கிவிடும், இரவு நேரங்களில் நிலவில் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு குறைந்து உறைபனிக் குளிராக இருக்கும்.
அடுத்த 2 வாரங்களுக்கு இரவு நீடிக்கும் நிலையில், இயந்திரங்களுக்கு தேவையான சூரிய ஒளி கிடைக்காமல் போகும். இத்தகைய உறைபனிக்குளிரில் பொதுவாகவே இயந்திரங்கள் வேலை செய்யாது. லேண்டர், ரோவரும் அதற்கு விதிவிலக்கல்ல.
அடுத்த 2 வார இரவு நீடிக்கவிருக்கும் இந்த குளிரில் இயந்திரங்களின் பாகங்கள் விரிசல் விழக்கூடும். இதனால் இயந்திரங்கள் விரைவிலேயே செயல் இழந்துவிடும். கருவிகள் சேதமடைவது மட்டுமின்றி அதன் கட்டமைப்பிலேயே சேதங்கள் ஏற்படும். எனவே அடுத்த 2 வாரங்களுக்கு நிலவில் லேண்டரும் ரோவரும் சேகரித்து அனுப்பக் கூடிய தகவலில்தான் சந்திரயான்3 திட்டத்தின் மொத்த பயனும் அடங்கியுள்ளது.
இதையும் படிங்க: பிரக்யான் ரோவர் என்ன செய்கிறது...? இஸ்ரோ கொடுத்த அதிரடி அப்டேட்!