பத்தினம்திட்டா: சபரிமலை தென்னிந்தியாவின் மிகப்பெரிய யாத்திரை தலங்களில் ஒன்றாகும். இங்கு கேரளா மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வருகை தருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மண்டலக்கால பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு டிசம்பர் 25ஆம் தேதி வரை சாமி தரிசனத்திற்காகப் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதன் பின்னர் டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 30ஆம் தேதி மகரவிளக்கு மகா உற்சவத்திற்காக மீண்டும் சபரிமலை கோயில் திறக்கப்பட உள்ளது. அதனை அடுத்து ஜனவரி 15ஆம் தேதி மகர விளக்கு சடங்குகள் முடிந்து ஜனவரி 20ஆம் தேதி சபரிமலை கோயில் நடை சாத்தப்படும்.
இந்த நிலையில் இந்த ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசனில் சபரிமலைக்கு வருகைதரும் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாகக் காணப்படுவதால் கடந்த சில நாட்களாக அரசு மற்றும் காவல்துறையினரின் ஏற்பாடுகள் முற்றிலுமாக சீர்குலைந்து காணப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வகையில், பம்பா மற்றும் சன்னிதானத்திற்குப் பக்தர்கள் வருவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் கூட்டம் காரணமாக அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் கட்டுக்கடங்காமல் உள்ளது. பம்பைக்கு வந்த பக்தர்கள் பலர் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையில், குழந்தைகள் மற்றும் பெண்கள் சிலர் கீழே விழுந்து அவர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடிலில் இருந்து சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்களில் 11 வயதுடைய பத்மபிரியா, திருச்சியைச் சேர்ந்த பெரிய சுவாமி மற்றும் கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ராஜேஷ் பில்லா ஆகியோர் கடும் நெரிசலில் சிக்கி துர்திஷ்டவசமாக உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கடந்த முறை முதல் சில நாட்களில் சராசரியாக 62,000 பேர் மலை ஏறிய நிலையில், இந்த முறை டிசம்பர் 6ஆம் தேதி முதல் சராசரியாக 88,000 பேர் மலை ஏறியுள்ளனர். சென்னை வெள்ளம் மற்றும் தெலுங்கானாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் காரணமாக முதல் சில நாட்களில் வருகைதராதவர்களும் தற்போது வருகைதருவதால், ஒரு நாளில் 1,20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரித்துக் கூட்ட நெரிசலைக் குறைக்க முதற்கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.
இந்த சூழலில் விர்ச்சுவல் புக்கிங் மூலம் தினமும் 90,000 பேரும் ஸ்பாட் புக்கிங் மூலம் சுமார் 20,000 பேரும் சபரிமலைக்கு வருகிறார்கள். வனப் பாதை வழியாகச் சராசரியாக 5,000 பேர் வருவதால், அனைத்து கட்டுப்பாடுகளும் உடைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலைமையை மதிப்பிடுவதற்காகக் கூட்டப்பட்ட மறு ஆய்வுக் கூட்டத்தில், விர்ச்சுவல் புக்கிங்கை 80,000-மாக குறைக்கவும் ஸ்பாட் புக்கிங்கை அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலையின் மண்டல மகரவிளக்கு சீசனுக்கான திட்டமிடல் எப்போதும் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கும். இம்முறையும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைத் தயார் செய்ய அரசு கூட்டம் கூட்டியிருந்தது. நிலக்கல், பம்பை மற்றும் பம்பை - சன்னிதானம் வனப் பாதையில் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அத்தியவிசய வசதிகள் செய்து தர ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், சன்னிதானத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கும் வசதி உள்ளதா என, சம்பந்தப்பட்டவர்கள் மதிப்பிடுவதில் தவறிவிட்டனர் என்று சபரிமலைக்கு வரும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பக்தர்களின் வாகனங்கள் அடர்ந்த வனப்பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளன. பம்பைக்குச் செல்லும் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதற்குத் தேவஸ்தான நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு இல்லாதது முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் ஆய்வுக் கூட்டங்களின் போதும் ஏடிஜிபிக்கும், தேவஸ்தான தலைவருக்கும் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. புதுக்கேரள பார்வையாளர்கள் சுற்றுப்பயணம் (Tour in New Kerala Audience) மேற்கொண்டிருந்த தேவஸ்தவம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் சபரிமலை நிலை குறித்துப் பார்வையிட நாளை சபரிமலைக்கு வருகைதர உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சபரிமலையின் பத்தினெட்டம் படியில் நிமிடத்திற்கு 60 பேர் ஏறுவதாக ஏடிஜிபி எம்.ஆர்.அஜித்குமார் கூறுகிறார். ஆனால் 75 பேர் ஏறுகிறார்கள் என்று தேவஸ்தான தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகிறார்.
இது குறித்து முன்னாள் டிஜிபி டி.பி.சென்குமார் கூறுகையில், "சபரிமலையில் பக்தர்கள் நெரிசலைத் தவிர்க்க அனுபவம் வாய்ந்த காவலர்களை பணியில் அமர்த்துவதன் மூலம் நிமிடத்திற்குக் குறைந்தது 100 முதல் 120 பேர் வரை பத்தினெட்டம் படியைக் கடக்க வழிவகை செய்ய இயலும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும் பத்தினெட்டம் படியை அகலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தேவஸ்தானம் முன்பு நீண்ட நாட்களாக உள்ளது. ஆனால் அப்படிச் செய்தால் தேர்தல் நேரங்களில் அரசாங்கத்திற்கு எதிரான வகையில் சுங்க மீறல் குற்றச்சாட்டுகள் எழும் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந்த விவகாரத்தில் சபரிமலை கோயில் தொடர்பான தந்திரிகள், ஆச்சார்யர்கள் கலந்து பேசி முடிவெடுத்தால், வரும் காலங்களிலும் சபரிமலையில் கூட்ட நெரிசலைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
தற்போது, மாதந்தோறும் ஐந்து நாட்கள் கோயில் நடை திறந்தாலும், மண்டல மகர விளக்கு சீசனில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது. ஆகவே பக்தர்கள் தங்குவதற்கும் சீசனில் அதிக நாட்கள் கோயிலைத் திறக்க முடியுமா என்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: டிசம்பர் 13 2001-இல் நடந்தது என்ன? - முழு விவரம்!