கொல்கத்தா / டெல்லி: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலின் போது வெடித்த வன்முறையில் 18 பேர் உயிரிழந்த நிலையில், இதுதொடர்பாக, அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9) இரவு டெல்லிக்கு வருகை தந்து உள்ளார். இவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், ஐந்து மாவட்டங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், 696 வாக்குச்சாவடிகளில் திங்கள்கிழமை (ஜூலை 10) காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அந்த ஒவ்வொரு சாவடியிலும் மாநில காவல்துறையைத் தவிர, நான்கு மத்தியப் படையினர் என பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மறுவாக்குப்பதிவு நடைபெறும் மாவட்டங்களில், வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் பகுதியில் 175 வாக்குச்சாவடிகளும், கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து மால்டா பகுதியில் 109 வாக்குச்சாவடிகளும் உள்ளன.
நாடியா பகுதியில் 89, கூச் பெஹார் பகுதியில் 53, வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் 46, உத்தர் தினாஜ்பூர் பகுதியில் 42, தெற்கு 24 பர்கானாஸ் பகுதியில் 36, புர்பா மெதினிபூர் பகுதியில் 31, ஹூக்ளி பகுதியில் 29 என மொத்தம் 696 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. டார்ஜிலிங், ஜர்க்ராம் மற்றும் காலிம்போங் மாவட்டங்களில், மறுவாக்க்குப்பதிவுக்கு உத்தரவிடப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மறுவாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில், வாக்காளர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கும் பொருட்டு, அப்பகுதிகளில் போதுமான அளவிற்கு படைகளை நிறுத்துமாறு, எல்லை பாதுகாப்பு படையின் கிழக்கு கமாண்டண்ட் இன்ஸ்பெக்டருக்கு, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் அறிக்கையின்படி, மேற்கு வங்கத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட வன்முறையில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர். முர்ஷிதாபாத், நாடியா மற்றும் கூச் பெஹார் மாவட்டங்கள், பாங்கர் போன்ற தெற்கு 24 பர்கானாக்கள் மற்றும் பர்பா மேதினிபூரின் நந்திகிராமில் உள்ள பகுதிகளில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை கண்டித்த ஆளுநர் போஸ், இது "மிகவும் கவலையளிக்கிறது" என்று குறிப்பிட்டு இருந்தார்.
வாக்குப்பதிவு நாளில், ஆளுநர் போஸ் பல்வேறு இடங்களுக்கு, குறிப்பாக, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், நிலைமையை ஆய்வு செய்தார். மேற்கு வங்கத்தில் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளுக்கு இடையே நடந்த மோதல் சம்பவங்களில் மக்கள் கொல்லப்பட்ட இடங்களை ஆளுநர் பார்வையிட்டார். அதேபோல், கூச் பெஹாரில் உள்ள தின்ஹாட்டா, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கர் மற்றும் கேனிங், பாசந்தி உள்ளிட்ட பகுதிகளிலும், இந்த தேர்தல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, ஆளுநர் கலந்துரையாடினார்.
மேற்குவங்க மாநில பஞ்சாயத்து தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை (ஜூலை 11ஆம் தேதி) எண்ணப்பட உள்ள நிலையில், ஜூலை 8ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலை செல்லாது என்று அறிவித்து, புதிதாக மீண்டும் தேர்தலை நடத்தக் கோரி, மேற்குவங்க மாநில பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் ஜெகந்நாத் சத்தோபத்யாய், மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஜில்லா பரிஷத்தில் உள்ள 928 இடங்களிலும், பஞ்சாயத்து சமிதிகளில் 9,419 இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 61,591 இடங்களிலும் போட்டியிடுகிறது. பாஜக 897 ஜில்லா பரிஷத் இடங்களிலும், 7,032 பஞ்சாயத்து சமிதி இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 38,475 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி CPI(M) கட்சி 747 ஜில்லா பரிஷத் இடங்களிலும், 6,752 பஞ்சாயத்து சமிதி இடங்களிலும், 35,411 கிராம பஞ்சாயத்து இடங்களிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 644 ஜில்லா பரிஷத் இடங்களிலும், 2,197 பஞ்சாயத்து சமிதி இடங்களிலும், 11,774 கிராம பஞ்சாயத்து இடங்களிலும் களம் கண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகாரஷ்டிரா அரசியல் நிலவரம் என்ன? மல்லிகார்ஜூன கார்கே அவசர ஆலோசனை!