உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜக அமோக வெற்றி பெற்று யோகி ஆதித்தயநாத் மீண்டும் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார். 2017ஆம் ஆண்டு தேர்தலில் 312 இடங்களை வென்ற பாஜக கூட்டணி, இம்முறை 273 இடங்களை வென்றுள்ளது.
அதேவேளை, கடந்த தேர்தலில் 47 இடங்களை மட்டுமே வென்றிருந்த சமாஜ்வாதி கட்சி இம்முறை 111 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் அக்கட்சியின் வாக்கு சதவிகிதமும் இதுவரை இல்லாத அளவிற்கு 32.06 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதையடுத்து மாநிலத்தின் எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி மீண்டும் உருவெடுத்துள்ளது.
தேர்தல் முடிவு குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில்," உத்தரப் பிரதேச மக்களுக்கு மனமார்ந்த நன்றி. எங்களின் இடங்களை இரண்டரை மடங்கும், வாக்கு சதவிகிதத்தை ஒன்றரை மடங்கு உயர்த்தியுள்ளீர்கள். இந்த தேர்தல் முடிவுகள் மூலம் பாஜகவின் சக்தியை குறைத்து வீழ்த்த முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது. பாஜகவின் இந்த சரிவு தொடரும். மக்கள் நலனுக்கான போராட்டம் தொடரும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 5,000 ஓட்டுக்களைக் கூட தாண்டாத ஒவைசிக் கட்சி