மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில், ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் சார்பில் OTM 2023 என்ற பயண வர்த்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி நேற்று (பிப்.2) தொடங்கி நாளை (பிப்.4) வரை நடைபெறுகிறது. இதில் நாட்டின் 30 மாநிலங்கள் மற்றும் 50 சர்வதேச தளங்களின் ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் இந்தியாவின் முக்கிய பொழுதுபோக்கு மற்றும் படப்பிடிப்பு தளமான ராமோஜி பிலிம் சிட்டியும் தனது ஸ்டாலை நிறுவி உள்ளது. இந்த நிலையில் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்கள், அதிகளவில் ராமோஜி பிலிம் சிட்டியின் ஸ்டாலில் குழுமி வருகின்றனர். அங்கு வரும் பார்வையாளர்கள் அனைவரும், நின்று கவனித்து செல்லும் இடமாக ராமோஜி பிலிம் சிட்டியின் ஸ்டால் உள்ளதாக சுற்றுலா ஊழியர் மயூர் கெய்க்வாட் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “ராமோஜி பிலிம் சிட்டியில் நிறைய பொழுதுபோக்கு அம்சங்களும், அதனை கவர்ந்திழுக்கும் பேக்கேஜ்களும் உள்ளன. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும், பாகுபலி உள்ளிட்ட சில பிரபலமான படங்களின் செட்களை பார்வையிட வருவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
இங்கு செல்வதற்கு வயது பேதமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஏனென்றால் அவர்களின் சேவை நன்றாக உள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கான உள்போக்குவரத்தில் அவர்களுடைய நிர்வாகம் அனைவராலும் பாராட்டும் படியாக காணப்படுகிறது” என்றார்.
மேலும் இதுகுறித்து ராமோஜி பிலிம் சிட்டியின் மார்க்கெட்டிங் பிரிவில் உள்ள மூத்த மேலாளர் டிஆர்எல் ராவ் கூறுகையில், “திருமணம், கார்ப்பரேட் பயன்பாடு, பொழுதுபோக்கு ஆகியவற்றிற்காக வரும் பார்வையாளர்கள், இங்கு மகிழ்ச்சியாக உள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பார்வையாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் இந்த ஸ்டாலுக்கு வருவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
நாங்கள் எங்களது பேக்கேஜ்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கோடை முகாம் குறித்த சிறப்பு பேக்கேஜ்கள் ஆகியவற்றை பற்றி விளக்க ஆர்வமாக உள்ளோம். கரோனா தொற்றால் 2 வருடம் வெளிவராத மக்கள், தற்போது வெளியில் வருவதில் ஆர்வம் காட்டுவதால், ராமோஜி பிலிம் சிட்டிக்கு அதிகளவிலான பார்வையாளர்கள் வருகின்றனர்” என்றார்.
அதேபோல் OTM 2023 சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் மேலாளர் துஷர் கார்க் கூறுகையில், “இந்த கண்காட்சி இன்னும் முடிவடையவில்லை, இருப்பினும் ராமோஜி பிலிம் சிட்டியின் பங்கேற்பால், எங்களது கண்காட்சி குறித்து பலரும் கேட்டு வருகின்றனர். மும்பை, டெல்லி மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள சுற்றுலா ஏஜென்ட் நிறுவனங்களும் இதில் பங்கேற்று வருகின்றன” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற தோல் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி!