மும்பை: பழம்பெரும் பாலிவுட் நடிகை சீமா தியோ இன்று உயிரிழந்தார். 81 வயதான சீமா தியோ மறைந்த பிரபல நடிகர் ரமேஷ் தியோவின் மனைவி ஆவார். நளினி சரஃப் என இயற்பெயர் கொண்ட சீமா தியோ மும்பையில் 1942ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு அஜின்கியா தியோ மற்றும் அபிநய் தியோ என இரு மகன்கள் உள்ளனர். அஜின்கியா தியோ மராத்தி நடிகர் ஆவார்.
50 வருடங்களுக்கு மேல் ஹிந்தி மற்றும் மராத்தி சினிமாவில் முக்கிய பங்காற்றியுள்ளார். இவர் நடித்த ஹிந்தி படங்களான சரஸ்வதி சந்திரா, சன்சார், கோஷிஷ், ஆனந்த், மார்ட் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. சீமா தியோ 80க்கும் மேற்பட்ட மராத்தி படங்களில் நடித்துள்ளார். 1971ஆம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற ஆனந்த் திரைப்படத்தில் ராஜேஷ் கண்ணா மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோருடன் நடித்திருந்தார்.
மும்பையில் உள்ள பந்த்ரா என்ற பகுதியில் தனது வீட்டில் காலை 7 மணி அளவில் சீமா தியோ உயிரிழந்தார். நடிகை சீமா தியோவின் இறுதிச் சடங்கு இன்று மாலை 4.30 மணி அளவில் மத்திய மும்பையில் உள்ள தாதர் பகுதியில் உள்ளசிவாஜி பார்க்கில் நடைபெறவுள்ளது. சீமா தியோ அல்செய்மர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு சீமா தியோவின் மகன் அஜின்கியா தியோ தனது தாய் அல்செய்மர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து சமூக வலைதளம் மூலம் கூறினார். அஜின்கியா தியோ “எனது தாயும் மராத்தி திரையுலகை சேர்ந்த ஸ்ரீமதி சீமா தியோ அல்செய்மர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தியோ குடும்பத்தினர் அனைவரும் அவர் விரைவில் குணமடைய பிராத்தனை செய்து வருகிறோம். ஒட்டுமொத்த மகாராஷ்டிரா மாநிலமும் அவர் மீது அதிக அன்பு வைத்துள்ளனர்” சீமா தியோ 14 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தனது மகன் அஜின்கியா தியோ இயக்கிய ஜடா என்ற படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: சத்தீஸ்கர் முதலமைச்சர் பிறந்த நாளில் அமலாக்கத்துறை சோதனை.. பிறந்த நாள் பரிசு என காங்கிரஸ் குற்றச்சாட்டு!