ஹைதராபாத் (தெலங்கானா): இந்தியாவில் கரோனா தொற்று இரண்டாவது அலையின் தாக்கம் மக்களை சுவாசக் காற்றுக்காக ஏங்க வைத்திருக்கிறது.
மக்கள் தங்களின் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள மூச்சு காற்றினைத் தேடி அலைகின்றனர். அவசர கால உயிர் காக்கும் மருந்துகளுக்காக அலைந்து திரிகின்றனர். மக்கள் படும் இன்னல்களுக்கு காரணம் ஒன்றிய அரசும், மாநிலங்களில் ஆளும் அரசுகளும் தான். நமது அரசு அமைப்புகளே தற்போது செயற்கை சுவாசம் செலுத்தும் நிலையில் இருப்பது கொடுமை. இவை அனைத்தும் ஒரு முனையில் நிற்க, கரோனாவை அரசு எப்படி கட்டுப்படுத்தப்போகிறது? என்ற பொதுவான கேள்வி அரசின் முன் வைக்கப்பட்டுள்ளது.
இக்காலகட்டத்தில் செயற்கை சுவாச கருவிகள் குறைபாட்டினாலும், உயிர்வளி (ஆக்சிஜன்) குறைபாட்டினாலும் மக்கள் மரணித்து வருகின்றனர். இவற்றை சரிசெய்ய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை உறுதிபடுத்தாமல், ஒன்றிய அரசு 'பிஎம் கேர்ஸ் ஃபண்ட்' மூலம் மாநிலங்களுக்கு செயற்கை சுவாச கருவிகள் வழங்கியது. கருவிகள் மாநிலங்களை அடைந்தது உண்மைதான். ஆனால், அவை பயன்படுத்தப்பட்டதா? தேவையற்ற பொருட்களாக ஒதுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆம், அனைத்து மருத்துவமனை கட்டமைப்புகளும், இந்த உபகரணங்களை ஏற்றுக்கொள்ளும் திறனில் இல்லை என்பதே உண்மை. பெரும்பாலான மருத்துவமனைகளின் கட்டமைப்புகளுக்கே செயற்கை சுவாசம் கொடுக்கவேண்டிய நிலை உள்ளது. மக்கள் ஒரு புறத்தில் சுவாசக் காற்றிற்காக அல்லல்படும் வேளையில், மருத்துவமனைகளின் இந்த அலட்சிய போக்கும், அரசின் தகவலறியா போக்கும் அனைவரையும் பெரும் வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்த செய்தியின் மூலம் மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்ட செயற்கை சுவாச கருவிகளின் தற்போதைய நிலை குறித்து தெரிந்துகொள்ளலாம்.
- பிகார்
மாநிலத்தில் அனைத்தும் சிறப்பாக இருப்பதாக முதலமைச்சர் நிதீஷ் குமார் நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. 2020ஆம் ஆண்டு பிஎம் கேர்ஸ் நிதியின் மூலம் கொடுக்கப்பட்ட 30 செயற்கை சுவாசக் கருவியில் ஒன்றை கூட இம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் இன்னும் பயன்படுத்தாமல் வைத்திருக்கிறது. காரணம் இதனை பயன்படுத்த தெரிந்த தொழில்நுட்பவியலாளர்கள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதிலிருந்தே மாநில மருத்துவமனைகளின் அமைப்பு செயலற்று கிடப்பது தெளிவாகிறது.
மொத்தமாக மாநிலத்தில் 207 செயற்கை சுவாசக் கருவிகள் பயன்படுத்தாமல் உள்ளது. 31 மாவட்டங்கள் உள்ள பிகாரில், மாவட்டம் ஒன்றிற்கு தலா 6 செயற்கை சுவாசக் கருவிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்கான ஊழியர்களை அரசு பணியமர்த்தாமல், மெத்தனப் போக்கை கடைப்பிடித்தன் விளைவு தான், இத்தனை உயிர் காக்கும் கருவிகள் தேவையற்ற பொருட்களாக ஆகிப்போனது என சமூக செயற்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
- பஞ்சாப்
பஞ்சாபிற்கு 'பி.எம் கேர்ஸ் நிதி' வாயிலாக 809 செயற்கை சுவாசக் கருவிகள் கொடுக்கப்பட்டது. அதில், 558 கருவிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. மற்றவை அனைத்தும் ஓரங்கட்டப்பட்டு கிடக்கிறது.
இதுகுறித்து கேள்வியெழுப்பிய ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் குல்தர் சிங், ஃபரித்கோட்டிலுள்ள குரு கோபிந்த் சிங் மருத்துவக் கல்லூரியில் மட்டும் 70 கருவிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக கூறுகிறார்.
இதுகுறித்து அக்கல்லூரியின் துணை வேந்தரிடம் கேள்வியெப்பியது ஈடிவி பாரத். அதற்கு, 'மத்திய அரசிடம் இருந்து 82 செயற்கை சுவாசக் கருவிகள் கிடைத்தது. அதில், 62 கருவிகள் செயலிழந்த நிலையிலேயே இங்கு வந்தடைந்தது. அதன் காரணமாக தான் அக்கருவிகள் பயன்பாடற்று கிடக்கிறது' என்றார்.
அப்படியானால், பழுதான கருவிகள் குறித்து வாய் திறக்காமல் மருத்துவமனைகள் மவுனம் காத்தது ஏன் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. மக்கள் ஒருபுறம் மரணப்படுக்கையில் கிடக்க, மாதக்கணக்கில் செயலற்று கிடக்கும் உயிர் காக்கும் கருவிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும், மருத்துவ வல்லுநர்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கின்றனர்.
- கர்நாடகம்
மாநிலத்துக்கு மொத்தம் கொடுக்கப்பட்ட 3,025 செயற்கை சுவாசக் கருவிகளில் 1,859 மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள 1,166 கருவிகள் பயன்பாடற்று கிடக்கிறது. நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலிலும், இதற்கான தொழில்நுட்ப தீர்வுகளை ஆளும் அரசு முன்னெடுத்ததாகத் தெரியவில்லை.
- ராஜஸ்தான்
ராஜஸ்தானுக்கு 'பி.எம் கேர்ஸ் நிதி'இன் உதவியுடன் 1900 கருவிகள் கொடுக்கப்பட்டது. இதில், 90 விழுக்காடு செயல்பாட்டில் உள்ளது. அரசின் துரித முயற்சிகளால், இதற்கான கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு, கருவிகள் உடனுக்குடன் பொருத்தப்பட்டது. மேம்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளுக்கு நிபுணர் குழு அமைத்து கண்காணிக்கப்பட்டது.
இப்படி இருந்தும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தில், தொழில்நுட்ப வல்லுநர்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் உள்ளதால், இங்கும் பல கருவிகள் பொருத்தப்பட்டும் செயல்படாமல் உள்ளது.
- ஹிமாச்சல் பிரதேசம்
இம்மாநிலத்திற்கு கொடுக்கப்பட்ட 500 கருவிகளில் 48 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இது குறித்து சுகாதாரத் துறையின் இணை இயக்குநர் ரமேஷ் தெரிவிக்கையில், ஒன்றிய அரசால் கொடுக்கப்பட்ட செயற்கை சுவாசக் கருவிகள் அனைத்தும் சிறப்பாக செயல்படுகிறது. எனினும் அதன் தேவை தற்போது இல்லாததால், 48 கருவிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
- கேரளா
கேரளாவுக்கு கிடைத்த 480 கருவிகளையும் பயன்படுத்தி வருகிறது. இதில், 36 கருவிகள் மட்டுமே தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
- உத்தரகாண்ட்
மொத்தமாக பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து 700 கருவிகள் கொடுக்கப்பட்டது. அதில் 670 கருவிகள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 30 கருவிகள், பொறியாளர்கள் குறைபாட்டால் பொருத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
- சத்தீஸ்கர்
கொடுக்கப்பட்ட 230 கருவிகளில், 220 கருவிகள் பயன்பாட்டில் உள்ளது.
- டெல்லி
தலைநகருக்கு கொடுக்கப்பட்ட 990 செயற்கை சுவாச கருவிகள் அனைத்தும் பயன்பாட்டில் உள்ளது. தற்போதைய நிலையில், டெல்லி அரசு மருத்துவமனைகளில் மொத்தமாக 1200 செயற்கை சுவாசக் கருவிகள் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மழுங்கிபோன அரசு அமைப்புகள்
குறைவான அல்லது அதற்கு மேற்பட்ட, இந்த கோளாறு கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் நிலவுகிறது. இதன் காரணமாக உயிர் காக்கும் கருவிகள் குப்பைகள் ஆக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை சரிசெய்ய யாரும் இல்லை. கேள்வி என்னவென்றால் - ஒரு கருவி குறைபாடு உடையதாக இருந்தால், அதை சரிசெய்ய அரசு இயந்திரங்கள் ஏன் முன்வரவில்லை.
அவ்வாறான இயந்திரங்கள் நன்றாக இருந்திருந்தால், இந்த உயிரற்ற கருவிகள் பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கும். உண்மையில், நாட்டில் எந்த குறையும் இல்லை. பெரும்பாலான காரியங்களில் பெரும்பாலான மாநிலங்கள் மோசமான நிலையில் உள்ளதற்கு அரசியல் அமைப்பின் செயலற்ற நிலை தான் காரணம்.
மக்கள் பணியாளர்களான அரசியல் அமைப்புக்கே செயற்கை சுவாசம் தேவைப்படும் நிலையிருந்தால், மக்களுக்கு அது எப்படி சாத்தியப்படும் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது...