பாஜக மக்களவை உறுப்பினர் வருண் காந்தி, நடிகை கங்கனா ரனாவத்தை கடுமையாகச் சாடியுள்ளார். விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்து கங்கனா கூறிய கருத்தை கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்வில் பங்கேற்ற கங்கனா, "இந்தியாவுக்கு 2014ஆம் ஆண்டு தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது. அதற்கு முன்பு கிடைத்தது சுதந்திரம் இல்லை பிச்சைதான்" என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் பாஜகவின் தீவிர ஆதரவாளரான கங்கனா மோடி பிரதமர் பொறுப்புக்கு வந்த 2014ஆம் ஆண்டை குறிக்கும் விதமாக இக்கருத்தை கூறினார்.
வருண் காந்தி காட்டமான ட்வீட்
கங்கனாவின் இந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வருண் காந்தி ட்விட்டரில் கங்கனாவை கடுமையாக விளாசியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், "மகாத்மா காந்தியின் தியாகத்தை அவமதிப்பது, அவரை கொன்றவர்களை போற்றுவது, மங்கல் பாண்டே, ராணி லக்ஷ்மிபாய், பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், நேதாஜி போஸ் உள்ளிட்ட லட்சக்கணக்கான விடுதலை வீரர்களை அவமதிப்பதை பைத்தியக்காரத்தனம் என்று சொல்வதா அல்லது தேச துரோகம் என்று சொல்வதா" எனக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
வேளாண் சட்ட விவகாரத்தில் பாஜக அரசின் செயல்பாடுகளை அக்கட்சியின் எம்.பியான வருண் காந்தி தொடர்ந்து விமர்சித்துவருகிறார். இதையடுத்து பாஜக தேசிய நிர்வாகக் குழுவிலிருந்து வருண் காந்தி அண்மையில் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: EXCLUSIVE: கைவினைக் கலைஞர்களை கவுரவ ஆசிரியர்களாக்க வேண்டும் - பத்மஸ்ரீ முனுசாமி