லக்னோ: கரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பல திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் பொதுமக்கள் கரோனாவை ஒழிக்கும் கடவுள்களாக கரோனா தேவி, கரோனா மாதா எனும் பெயர்களில் புதிதாக கடவுள் சிலையை உருவாக்கி வழிபட்டுவருகின்றனர்.
இதுபோன்று உத்தரப்பிரதேச மாநிலம் பார்த்தபாகர் மாவட்டத்தில் உள்ள சுக்லாப்பூர் கிராமத்தில், கரோனா மாதா கோயிலை எழுப்பி அப்பகுதி மக்கள் வழிபட்டனர். வேப்பமரத்தின் அடியில் நிறுவப்பட்ட அக்கோயிலின் சுவரில், 'சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்', 'கைகளைகழுவுங்கள்' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
கரோனா மாதாவை வழிபட்டால் கரோனா தொற்றிலிருந்து மீள முடியும் என்று அப்பகுதி மக்கள் கண்மூடித்தனமாக நம்பியுள்ளனர். இதனால் பலரும் ஒரே நேரத்தில் கரோனா மாதாவை பார்க்க அங்கு படையெடுத்துள்ளனர். இந்த தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் கோயிலை அடியொடு இடித்து தரைமட்டமாக்கியது.
'ஆத்தா வந்துட்டா..' கரோனாவின் ஆட்சிக்கு மத்தியில் கரோனா தேவியின் ஆசி
மூடநம்பிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக சுக்லாப்பூர் காவல் நிலையத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுகிறது. கோயிலை கட்டிய ஒருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே பொதுமக்களின் அறியாமையால்தான் கரோனா தொற்றின் முதல் அலை இரண்டாவது அலையாக உருவெடுத்துள்ளது. இனி மூன்றாவது அலையாகவும் உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில் இது போன்ற மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காத அம்மாவட்ட நிர்வாகத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா மாதா கோயில் - படையெடுக்கும் மக்கள்!