கடந்தாண்டு, மார்ச் 31ஆம் தேதி நடைபெறவிருந்த குடிமைப் பணி தேர்வுகள் கரோனா காரணமாக அக்டோபர் 4ஆம் தேதி நடத்தப்பட்டன. இந்நிலையில், தேர்வில் தோல்வி அடைந்ததன் மூலம் இறுதி வாய்ப்பை இழந்தவர்களுக்கு மற்றொரு வாய்ப்பளிக்கப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதில், தோல்வி அடைந்த தகுதியான வயது வரம்பில் உள்ளவர்கள் மீண்டும் தேர்வை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்காக தயாராகிவரும் ரச்னா சிங், மற்றொரு வாய்ப்பளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய இடையூறு காரணமாக பலர் தேர்வுக்கு தயாராக முடியவில்லை என அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளித்த மத்திய அரசு, "இப்போது அளிக்கப்படும் வாய்ப்பு, 2021ஆம் ஆண்டுக்கான தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டுமே. அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு வழங்கப்படாது" எனக் குறிப்பிட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், தினேஷ் மகேஷ்வரி ஆகியோர் கொண்ட அமர்வு, மத்திய அரசின் நிலைபாட்டை பாராட்டுகிறோம்” எனத் தெரிவித்தது.
இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், "கரோனா ஊரடங்கு ஏற்படுத்திய மன அழுத்தத்தால் பலர் தேர்வுக்கு முறையாக தயாராகவில்லை என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அது முற்றிலும் உண்மை கிடையாது. குடிமைப் பணி தேர்வுகளுக்கு தயாராகவதற்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி நடைபெறவிருந்த குடிமைப் பணி முதல்நிலை தேர்வுகள் அக்டோபர் 4ஆம் தேதிதான் நடத்தப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.