டெல்லி : உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா கட்சி போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை அக்கட்சியின் மூத்தத் தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத் ஆராய்ந்தார்.
இந்நிலையில் இன்று (ஜன.13) விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயித்-ஐ சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் உத்தரப் பிரதேசத்தில் சிவசேனா தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்டோருடன் கூட்டணி வைக்க மாட்டோம். நாங்களும் சமாஜ்வாதி கட்சியினரும் சித்தாந்த ரீதியாக மாறுபட்டவர்கள். ஆகவே நாங்கள் அவர்களுடன் செல்ல மாட்டோம். எனினும் இந்தச் சூழலில் உத்தரப் பிரதேசத்தில் மாற்றம் தேவை” என்றார்.
மேலும், “உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக சிவசேனா தொடர்ந்து பாடுபட்டுவருகிறது” என்றும் அவர் கூறினார். இது குறித்து சஞ்சய் ராவத், “நாங்கள் அயோத்தி இயக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளோம். மதுராவிலும் ஒரு இயக்கமாக செயல்படுவோம். விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய விவசாயிகளின் மிகப்பெரிய தலைவர் ராகேஷ் திகாயித்.
போராட்டத்தின் போது அவரது கண்களில் கண்ணீரையும், விவசாயிகளுக்காக போராடி வெற்றி பெற்றபோது அவர் மகிழ்ச்சியடைந்ததையும் பார்த்திருக்கிறேன். நான் திகாயித்தை சந்திப்பேன், அவருடைய கருத்துக்களையும் அவர் என்ன விரும்புகிறார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க : பிபின் ராவத் மரணம் சந்தேகங்களை எழுப்புகிறது - சஞ்சய் ராவத்