இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரம் காரணமாகப் பல்வேறு நகரங்களில் சுகாதாரப் பேரிடர் நிலவிவருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் பெருந்தொற்றின் தீவிரத்தன்மை நாளுக்கு நாள் உச்சம் தொட்டுவருகிறது.
குறிப்பாக சிகிச்சைக்கான ஆக்ஸிஜன், மருந்துகள், படுக்கைகளின் தட்டுபாடு ஆகியவைத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துவருகிறது. இது தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், மாநிலத்தின் ஆறு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் கையிருப்பு காலியாகும் சூழலில் உள்ளது. இன்றுடன்(ஏப்.22) ஆக்ஸிஜன் விநியோகம் தீரும் அபாயம் உள்ள நிலையில், மத்திய அரசு ஒதுக்கியுள்ள ஆக்ஸிஜன் டெல்லிக்கு இன்னும் கிடைக்கவில்லை.
அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசம், ஹரியானா ஆக்ஸிஜன் விநியோகத்திற்கு முட்டுக்கட்டை போடுவது கவலைக்குரியது எனக் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் சுமார் 25 ஆயிரம் பாதிப்புகளும், 250 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அங்கு தற்போது 144 ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.