வாரணாசி: உத்திரபிரதேச மாநிலம் பேலுபூர் பகுதியில் கடந்த மே 31ஆம் தேதி சாலையோரம் நின்ற காரில் இருந்து காவலர்கள் ரூ. 92.94 லட்சம் பணத்தை மீட்டனர். இந்நிலையில் பணம் யாருடையது எனவும், பணம் பறிபோனதாக யாரேனும் புகார் கொடுத்துள்ளார்களா என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் முன்னதாக குஜராத் மாநிலம் அவுரியா மாவட்டம் பண்டாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் ஊழியரை சிலர் கடத்தி சென்று அவரிடம் இருந்து கத்தி முனையில் பணம் பறித்துச்சென்றதாக கூறப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் ஏற்கனவே நான்குபேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு குறித்து தற்போது திடுக்கிடும் பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து சிறப்பு காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பேலுபூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையில் விசாரித்தபோது, தொழிலதிபரின் ஊழியரை கடத்தி சென்று பணத்தை கொள்ளையடித்துவிட்டு காவலர்கள் உட்பட சிலர் பணத்தை பங்குபோட்டுக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதில் மற்றோரு காவலருக்கு பங்கு பிரிப்பதில் குறைவான தொகை வழங்கப்பட்டதால் அவர் ஆத்திரம் அடைந்துள்ளார். இதனால் இந்த சம்பவம் குறித்து அவர் வெளியில் தகவலை கசிய செய்துள்ளார்.
இதனை அடுத்துதான் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் தற்போது பேலுபூர் காவல்நிலைய காவலர்கள், ஆய்வாளர் ரமா காந்த் துபே, சப்-இன்ஸ்பெக்டர்கள் - சுஷில் குமார், மகேஷ் குமார் மற்றும் உத்கர்ஷ் சதுர்வேதி மற்றும் காவலர்கள் - மகேந்திர குமார் படேல், கபில் தேவ் பாண்டே மற்றும் ஷிவ்சந்த் ஆகியோரை அம்மாநில அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.
தொடர்ந்து இந்த சம்வம் குறித்து வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. கொள்ளையர்களையும், குற்றவாளிகளையும் கண்டறிந்து கைது செய்யும் காவலர்களே கொள்ளையர்களாக மாறியுள்ள சம்பவம் வாரணாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக வாரணாசியின் பல்வேறு பாகுதிகளில் இரவு நேரங்களில் பேய்கள் நடமாட்டம் உள்ளதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், பேலுபூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டரை தான் இது குறித்து விசாரிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்த காவலர் மீது தற்போது பணம் கொள்ளை வழக்குப் பதிவாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் பேய் வேடம் அணிந்தது கொள்ளையர்களா? இல்லை காவலர்களா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: Karnataka free bus:மகளிருக்கு இலவச பேருந்து பயணம் - கண்டக்டராக மாறிய முதலமைச்சர் சித்தராமையா!