டெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து மூன்றாவது நாளாகத் தாக்குதல் நடத்திவருகிறது. இதனால் அங்கு போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா மிகுந்த முனைப்புக் காட்டிவருகிறது.
மக்கள் நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர். இந்தத் தாக்குதலில் 198 உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து, பொருளாதாரத் தடையும் விதித்துவருகின்றன. இந்தியா இந்த விவகாரத்தில் தொடர்ந்து நடுநிலை வகித்துவருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி பிரதமர் நரேந்திர மோடியை இன்று (பிப்ரவரி 26) தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜெலன்ஸ்கி, "நரேந்திர மோடியுடன் பேசினேன். ரஷ்ய ஆக்கிரமிப்பு, பதிலடி குறித்து தெரிவித்தேன்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் எங்கள் நிலத்தில் உள்ளனர். அவர்கள் குடியிருப்பு கட்டடங்கள் மீது நயவஞ்சகமாகத் தாக்குதல் நடத்துகிறார்கள். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவான அரசியல் நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியப் பிரதமர் அலுவலகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உக்ரைனில் நடந்துவரும் தாக்குதல் குறித்து நரேந்திர மோடியிடம், ஜெலென்ஸ்கி விரிவாக எடுத்துரைத்தார்.
தாக்குதலால் உக்ரைனில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு, சேதம் குறித்து நரேந்திர மோடி வேதனை தெரிவித்தார். வன்முறை நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் எனத் தெரிவித்து, அமைதி வழியில் தீர்வுகாண இந்தியா தனது பங்களிப்பை எப்போதும் அளிக்கும் எனக் கூறப்பட்டது.
உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உக்ரைன் அலுவலர்கள் உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'பிரதமர் மோடி சொன்னால் புதின் கேட்கக்கூடும் - இந்தியாவிடம் கெஞ்சிய உக்ரைன் தூதர்