சான் பிரான்சிஸ்கோ : ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கியது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அதன் உரிமையாளரும் உலக பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார். முன் அறிவிப்பின்றி ஊழியர்கள் பணி நீக்கம், ப்ளூ டிக்கெட் சந்தா என எலான் மஸ்க் கையில் எடுத்த அனைத்து விவகாரங்களும் சர்ச்சையில் முடிந்தன.
ட்விட்டர் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை குறிக்கும் ப்ளூ டிக்கிற்கு சந்தா செலுத்தாவிட்டால் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அந்த வசதி துண்டிக்கப்படும் என எலான் மஸ்க் முதன் முதலில் அறிவித்தார். இருப்பினும் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பின்னரும் பலர் அந்த வசதியை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் சந்தா செலுத்தாவிட்டால் ப்ளூ டிக் வசதி துண்டிக்கப்படும் என தன் ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். மேலும் ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே பெறக் கூடிய வகையிலான பல்வேறு வசதிகளை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தினார்.
அதில் 10 ஆயிரம் எழுத்துகள் அடங்கிய நீண்ட பதிவுகளை பயனர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளில் பதிவிடும் வசதியும் அடங்கும். இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் 4 ஆயிரம் எழுத்துகளில் ட்வீட் செய்யும் வசதியை ட்விட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரத்யேகமாக ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே இந்த வசதியை பெற முடியும் என எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். இந்நிலையில் ப்ளூ டிக் சந்தாதாரர்களுக்கு எலான் மஸ்க் விடுத்திருந்த காலக் கெடு நிறைவடைந்தது. இருப்பினும் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு பயனர்கள் தங்களது மாத சந்தாவை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இன்று (ஏப். 21) வியாழக்கிழமை மாத சந்தா செலுத்தாத ட்விட்டர் பயனர்களின் ப்ளூ டிக் அங்கீகாரம் நீக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து உள்ளது. ட்விட்டர் நிறுவனம் ஏறத்தாழ 3 லட்சம் ப்ளூ டிக் சந்தாதாரர்களை கொண்டு உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பத்திரிக்கையாளர்கள், விளையாட்டு மற்றும் தடகள வீரர், வீராங்கனைகள், சினிமா மற்றும் பொதுத் துறை சார்ந்த பிரபலங்கள் எனக் கூறப்படுகிறது.
மாத சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக் வசதி நீக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சிம்பு, விளையாட்டு வீரர் மகேந்திர சிங் டோனி உள்ளிட்ட பலருக்கும் ப்ளூ டிக்குகள் நீக்கப்பட்டு உள்ளன.
சர்வதேச அளவில் பார்க்கையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், அமெரிக்க டிவி பிரபலம் ஓப்ரா வின்பிரே, பாப் பாடகி பியாங்க் உள்ளிட்ட பலரின் ட்விட்டர் ப்ளூ டிக்குகள் அகற்றப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. தனிப்பட்ட பயனர்கள் ப்ளூ டிக் வசதி பெற 8 டாலர்களும், ஒரு நிறுவனம் ப்ளு டிக் வசதி பெற மாதந்தோறும் ஆயிரம் அமெரிக்க டாலர்களும் சந்தாவாக செலுத்த வேண்டும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
தனிப்பட்ட பயனர்களின் கணக்கு அல்லது நிறுவனத்தின் பிரதிநிதியாக காணப்படுகிறவர்கள் மாதந்தோறும் 50 அமெரிக்க டாலர்கள் செலுத்தி ப்ளூ டிக் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளலாம் என டிவிட்டர் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரம் முன் ப்ளூ டிக் வசதி பெறாத தனிப்பட்ட பயனர்களின் கணக்கை ட்விட்டர் நிறுவனம் நிர்வகிக்க வில்லை என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க : Ramadan: ரம்ஜான் குறித்து இஸ்லாம் கூறும் அர்த்தம் என்ன!