கட்சிரோலி: மகாராஷ்டிரா மாநிலத்தில் 26 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் எனக் காவல் துறை தரப்பில் நேற்று (நவ. 13) தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தின் வனப் பகுதிகள் சத்தீஸ்கர் மாநில எல்லையில் அமைந்துள்ளன.
மகாராஷ்டிராவின் கட்சிரோலி (Gadchiroli) மாவட்டம் தனோரா தாலுகா (Dhanora taluka) முரும்கான் (Murumgaon) மர்தின்டோலா (Mardintola forest) அடர்ந்த காடுகளில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக காவலர்களுக்கு உளவுத் தகவல் கிடைத்தது.
துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொலை
இந்தத் தகவலின் பேரில் காவலர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது காடுகளில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதையடுத்து காவலர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். நேற்றைய தினம் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் நக்சல்கள் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மாவோயிஸ்ட்கள் என தற்போது உறுதியாகியுள்ளது.
இந்தத் தாக்குதலில், நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த மவோயிஸ்ட் தலைவர் மிலிந்த் டெல்டும்டே கொல்லப்பட்டார் எனவும் கொல்லப்பட்ட 26 மாவோயிஸ்ட்கள் அவரும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. ஹ்யாத்ரி நீ தீபக் என இயற்பெயர் கொண்ட மிலிந்த், இந்தியா முழுவதும் மவோயிச செயல்பாடுகளை கொண்டுசென்றதில் முக்கிய பங்கு வகித்தவர். பொறியாளரான மிலிந்த கடந்த 30 ஆண்டுகளாக மாவோயிஸ்ட் இயக்கங்களில் செயல்பட்டுவந்தார்.
30 ஆண்டுகால மாவோயிஸ்ட்
மாவோயிஸ்ட் இயக்கத்தின் மத்திய மண்டல குழுவில் உறுப்பினரான மிலிந்த், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா ஆகிய பகுதிகளில் இயங்கி வந்தார். மேலும், தடைசெய்யப்பட்ட மவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராகவும் இருந்துள்ளார்.
மகாராஷ்டிரா - மத்தியப் பிரதேசம் - சத்தீஸ்கர் (MMC) மாநிலங்களை உள்ளடக்கிய மாவோயிஸ்ட் மண்டலங்களை உருவாக்கியதில் பெரும் பங்களிப்பை அளித்தவர். அந்த மண்டலத்தின் முக்கியத் தலைவராகவும் அவர் இருந்தார். மேலும், மிலிந்த் டெல்டும்டே தலைக்கு ரூ. 50 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.