டெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவை பாஜக எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி, ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை சந்தித்து பேசியதாக, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி பிரச்னையை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட திரிணாமுல் எம்பி.க்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த சட்ட அலுவலராக இருக்கும் துஷார் மேத்தா, சாரதா, நாரதா போன்ற ஊழல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுவேந்து அதிகாரியை சந்தித்துள்ளர்.
இந்த வழக்குகளில் சிபிஐ தரப்பில் அவர் ஆஜராகி வாதிட்டு வருகிறார். இவ்வேளையில் சொலிசிட்டர் ஜெனரலின் இந்த செயல் முறையற்றது. இதனால், அவரை அப்பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
சந்திப்பு குறித்து மறுப்பு
இந்நிலையில், துஷார் மேத்தா அளித்துள்ள பேட்டியில், "என் வீட்டிற்கு சுவேந்து அதிகாரி வரும் வேளையில், நான் வேறு அறையில் ஒரு கூட்டத்தில் இருந்தேன். உதவியாளர் சுவேந்துவின் வருகை குறித்து என்னிடம் கூறினார்.
அவரை தற்போது சந்திக்க இயலாது. அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கும்படி உதவியாளரிடம் கூறி அனுப்பினேன். அவரும் நன்றி தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். இதுதான் நடந்த உண்மை சம்பவம்" என்று தெரிவித்துள்ளார்.
திரிணாமுன் காங்கிரஸ் நகர்வு
இதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை நாளை (ஜூலை 5) சந்தித்து, துஷார் மேத்தாவின் பதவியை பறிக்கும்படி முறையிடவுள்ளனர். பல வழக்குகளில் தொடர்புடைய ஒருவரை சொலிசிட்டர் ஜெனரல் சந்தித்து பேசுவது ஆபத்தானது என திரிணாமுல் காங்கிரஸ் வாதிட்டு வருகிறது.
சுவேந்து அதிகாரிக்கு பாதுகாப்பு
சமீபத்தில் விலக்கிக் கொள்ளப்பட்ட சுவேந்து அதிகாரிக்காக காவல் துறை பாதுகாப்பை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சுவேந்து வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதி ஸ்வகாந்த் பிரசாந்த், “மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஏற்கனவே மத்திய அரசின் பாதுகாப்பில் இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதன் அடிப்படையில் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும்" என்று கூறி பாதுகாப்பை திருப்பி அளிக்கும்படி உத்தரவிட்டது.