சாம்ராஜ்நகர்(மைசூரு) : சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பந்திப்பூர் தேசிய உயிரியல் பூங்கா மற்றும் மைசூரில் உள்ள நாகர்ஹோளே தேசிய உயிரியல் பூங்கா ஆகியவற்றில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
இவ்விரு பூங்காக்களிலும் புலிகளுடன் காட்டெருமை, யானைகள் கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது.
பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நேற்று (ஜன. 22) கணக்கெடுப்பு பணி தொடங்கியது, பிப்ரவரி 8ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், நாகர்ஹோளே புலிகள் காப்பகத்தில் இன்று (ஜன.23) கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
2018இல் பந்திப்பூரில் 173 புலிகள் இருந்தன
பிலிகிரி ரங்கநாதசுவாமி கோயில் புலிகள் காப்பகத்தில் ஜன.27ஆம் தேதி முதல் கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளது. மலேமகாதேஸ்வரா உயிரியல் பூங்கா, காவிரி உயிரியல் பூங்காவில் பிப்ரவரி மாதத்தில் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்படுகின்றன.
பந்திப்பூர் தேசிய உயிரியல் பூங்கா 868.63 கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 173 புலிகள் உள்ளன. புலிகள் கணக்கெடுப்பின் காரணமாக ஜனவரி 23 முதல் 25 வரையிலும், ஜனவரி 27 முதல் பிப்ரவரி 1 வரையிலும் காலை 6 மணி சஃபாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வகையில் இந்தாண்டு ஐந்தாவது தேசிய புலி மதிப்பீடு (சென்சஸ்) நடத்தப்படுகிறது. 2018ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் பிலிகிரி ரங்கநாதசுவாமி கோயில் புலிகள் காப்பகத்தில் 52 முதல் 80 புலிகளும், நாகர்ஹோளே புலிகள் காப்பகத்தில் 125 புலிகளும் காணப்பட்டன.
இந்தாண்டு புலிகள் கணக்கெடுப்பு அறிக்கை M-STrIPES என்ற செயலில் பதிவேற்றம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனக் காவலர்கள் புலிகள் கணக்கெடுப்பதற்கு ஏதுவாக ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய வனவிலங்கு நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்களால் பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேசிய பேரிடர் மீட்புப் படையின் ட்விட்டர் பக்கம் 'ஹேக்'!