நாக்பூர்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தொலைப்பேசியில் மிரட்டல் விடுத்ததாகக் கைது செய்யப்பட்ட ஜெயேஷ் பூசாரிக்கும், தற்போது கர்நாடக சிறையில் உள்ள அப்சர் பாஷாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதை மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும், பெங்களூரு தீவிரவாத தாக்குதல் வழக்கில் இருவருக்கும் தொடர்புடையது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு ஒரு கொலை மிரட்டல் வந்தது. தொலைப்பேசியில் பேசிய மர்ம நபர், தாம் தாவூத் இப்ராகிமின் கும்பலைச் சேர்ந்தவர் என்றும் நிதின் கட்கரி ரூ.100 கோடி தரவேண்டும். தர மறுத்தால் அவரை கொன்றுவிடுவோம் என்று மிரட்டி தொலைப்பேசியை வைத்துவிட்டதாகத் தெரிகிறது. அந்த நேரத்தில் பூஜாரி கர்நாடக மாநில சிறையில் வைக்கப்பட்டிருந்தாக போலீசார் கூறினர்.
பின்னர், மார்ச் 21 ஆம் தேதி தொலைப்பேசி மூலம் நிதின் கட்கரிக்கு மற்றொரு கொலை மிரட்டல் வந்தது. இந்த முறை தொலைப்பேசியில் பேசியவர், பா.ஜ.க. எம்.பி.யான நிதின் கட்சி ரூ.10 கோடி தரவேண்டும். அவர் தர மறுத்தால் கொன்றுவிடுவோம் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே நிதின்கட்கரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கடந்த மார்ச் 28 ஆம் தேதி பெலகாவியில் சிறை வைக்கப்பட்டிருந்த பூஜாரியை போலீசார் கைது செய்து நாக்பூருக்கு அழைத்து வந்தனர். அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொலை மிரட்டல் விவகாரம் தொடர்பாக பூஜாரியிடம் நாக்பூர் போலீசார் விசாரணை நடத்தியபோது பூஜாரிக்கும் “ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பயங்கரவாதி பஷிருதின் நூர் அகமது என்ற அப்சர் பாஷாவுக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது” என்று நாக்பூர் காவல்துறையின் உயர் அதிகாரி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் 2012 ஆம் ஆண்டு லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba) பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்ற பாஷாவுக்கும் பூஜாரிக்கும் தொடர்பு இருந்துவந்துள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திலும் பாஷாவுக்கு தொடர்பு இருந்துள்ளது. பாஷா இப்போது பெலகாவியில் உள்ள சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். பாஷாவை கைது செய்ய போலீசார் பெலகாவி சென்றுள்ளதாகவும் உயர் அதிகாரி கூறினார். மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் கடந்த மே மாதம் நாக்பூர் சென்று நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் வந்தது தொடர்பாக விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:போலீசுக்கு பயந்து தந்தையுடன் ஒளிந்த சிறுவன் - மின்சாரம் தாக்கி பலியான சோகம்!