திருவனந்தபுரம்: இந்தியாவில் முதல் குரங்கம்மை நோய் பாதிப்பு கடந்த ஜூலை 15ஆம் தேதி கேரளாவில் பதிவானது. தொடர்ந்து, ஜூலை 18ஆம் தேதி துபாயில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கும் குரங்கம்மை இருப்பது உறுதியானது. இதனால், குரங்கம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் கேரளாவில் தீவிரப்படுத்தப்பட்டன.
மேலும், நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணியில் கேரள சுகாதாரத்துறை முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. மேலும், இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனையை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஜூலை 6ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயதான நபர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதனால், குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் அவர் தற்போது மஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும், அவரின் உடல்நிலை சீராக உள்ளது எனவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குரங்கம்மை வைரஸ் பரவல்... தெரிந்துகொள்ள வேண்டியவை....!