ஹைதராபாத்: தெலங்கானா மாநில உயர்நீதிமன்றம், முதல்முறையாக தெலுங்கு மொழியில் தீர்ப்பு வழங்கி வரலாறு படைத்து உள்ளது. தாயின் சொத்தில் பங்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, மூத்த நீதிபதி பி.நவீன் ராவ் மற்றும் நீதிபதி நாகேஷ் பீமபாகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 44 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை, தெலுங்கு மொழியில் வெளியிட்டது.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில், அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன. வழக்கு தொடர்பான மனுக்கள் தாக்கல் செய்யப்படும் போது, ஆதார் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள், உள்ளூர் மொழியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நீதிமன்றப் பதிவேட்டில் சமர்ப்பிக்கப்படுவதே நடைமுறையாக இருந்து வந்தது.
சமீபகாலமாக, உள்ளூர் மொழிகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், நீதிமன்ற நடவடிக்கைகளும், தாய்மொழியில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளன. உச்சநீதிமன்றத்தின் பல்வேறு முக்கிய தீர்ப்புகள், தற்போது உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களும், உள்ளூர் மொழியில் தீர்ப்பு வழங்க ஆர்வம் காட்டி வருகின்றன. நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில், கேரள உயர்நீதிமன்றம் மலையாளத்தில் தீர்ப்பு வழங்கி இருந்தது. கேரளாவுக்கு அடுத்தபடியாக உள்ளூர் மொழிகளில் தீர்ப்பு வழங்கி, இந்தப் பிரிவில், இரண்டாம் இடத்தை, தெலங்கானா உயர்நீதிமன்றம் தன்வசம் ஆக்கியுள்ளது.
கேரளா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களைத் தவிர, மற்ற நீதிமன்றங்களில் தெலுங்கில் தீர்ப்புகள் வழங்கப்பட்ட சம்பவங்கள் மிகவும் அரிது. நீதிபதி பி.நவீன் ராவ் மற்றும் நீதிபதி நாகேஷ் பீமபாகா ஆகியோர் அடங்கிய அமர்வு, தெலுங்கில் தீர்ப்பை வழங்கி புதிய வரலாற்றை துவக்கி வைத்து உள்ளது. தீர்ப்பின் முடிவில், கட்சியினர் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக தெலுங்கில் வெளியிடப்பட்டதாக நீதிபதிகள் அமர்வு தெரிவித்து உள்ளது.
அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்காக, 41 பக்க அளவிலான ஆங்கிலத் தீர்ப்பும் வெளியிடப்பட்டது. தெலுங்கு மொழியிலான தீர்ப்பில், ஏதாவது சந்தேகங்கள் இருக்கும்பட்சத்தில், ஆங்கிலத்தில் உள்ள தீர்ப்பை கருத்தில் கொண்டு அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் உண்மைகளைத் தவிர, இருதரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வழக்கை நிரூபிக்க முன்வைத்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும், இந்த நீதிபதிகள் அமர்வு, தெலுங்கில் மொழிபெயர்த்து உள்ளது.
தெலங்கானா உயர்நீதிமன்றம் தாய்மொழியில் தீர்ப்பு வழங்கியிருப்பது மொழி ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருங்காலங்களில் தெலுங்கு மொழியில், அதிக அளவிலான தீர்ப்புகள் பிறப்பிக்க, இது முதல்படி ஆக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த வீரா ரெட்டியின் மகன்கள் கே.சந்திரா ரெட்டிக்கும், முத்யம் ரெட்டிக்கும் இடையே, தாயாருக்கு சொந்தமான நிலத்தை மாற்றுவது தொடர்பான விவகாரம், நீதிமன்றப்படி ஏறி உள்ளது. தாயார் சாலம்மாவுக்குச் சொந்தமான 4.08 ஏக்கர் நிலம், அவரது மரணத்திற்குப் பிறகு தனக்கு மட்டுமே சொந்தம் எனக்கூறி, சந்திரா ரெட்டி நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த மனுவை விசாரித்த சிவில் நீதிமன்றம், தாயார் எழுதிய உயிலில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, அந்த உயில் செல்லாது என்று குறிப்பிட்டது. மேலும், தாயாரின் சொத்துக்கள், மகன்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிடப்படும் என்று தீர்ப்பு வழங்கியது.
கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, சந்திரா ரெட்டி மற்றும் அவரின் வாரிசுகள், தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். முத்யம் ரெட்டி இறந்த நிலையில், அவரது, வாரிசுகளும், இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.நவீன் ராவ், நீதிபதி நாகேஷ் பீமபாகா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை அளித்து, கீழமை நீதிமன்றம், உயிலில் சந்தேகம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கான தெளிவான காரணங்களையும் கூறி உள்ளது. அந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட முடியாது எனக் கூறி சந்திரா ரெட்டியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.