டெல்லி : உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் அஸ்வினி குமார் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கையில் கட்டாய மதமாற்ற புகார்கள் எழுந்துள்ளன” என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
தஞ்சாவூரை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி விஷம் அருந்திய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஜன.19ஆம் தேதி உயிரிழந்தார்.
கட்டாய மதமாற்றம் காரணமாக மாணவி உயிரிழந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, “வழக்கின் தீவிரம் கருதி இதனை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரிக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்கவுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அஸ்வினி குமார் என்ற வழக்குரைஞர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “மாணவியின் தற்கொலையை சாதாரணமாக கருத முடியாது. கட்டாய மதமாற்ற புகார்கள் எழுந்துள்ளன. ஒருவரை மிரட்டியோ அல்லது பணம் பொருள்கள் கொடுத்தோ கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவது இந்திய அரசியலமைப்பு சட்ட ஷரத்துகள் 14,21 மற்றும் 25-ஐ புண்படுத்துவதாக உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “கட்டாய மதமாற்றம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களை தடை செய்ய சட்டவிதிகள் வகுக்க வேண்டும்” என்றும் வழக்குரைஞர் அஸ்வினி குமார் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : பள்ளி மாணவி தற்கொலை - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை