ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் உருவானதில் இருந்து, கடந்த 10 வருடமாக முதலமைச்சராக இருந்தவர், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் கே சந்திரசேகர் ராவ். இந்த நிலையில், இவர் நேற்று (டிச.7) இரவு எரவெள்ளியில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்து உள்ளார். இதில் காயம் அடைந்த அவர், சோமாஜிகுடா யசோதா மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் அவரது இடுப்பெலும்பில் முறிவு ஏற்பட்டு இருப்பதைக் கண்டறிந்து உள்ளனர். இதனையடுத்து, அவருக்கு தேவையான பரிசோதனைகள் செய்த பிறகு, அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், யசோதா மருத்துவமனை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், “தனது வீட்டில் உள்ள பாத்ரூமில் தவறி விழுந்ததால், சந்திரசேகர் ராவ் யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து தேவையான பரிசோதனைகளும் எடுக்கப்பட்டன.
இதன்படி, அவரது இடது இடுப்பு மற்றும் கழுத்துப் பகுதியில் முறிவு ஏற்பட்டு உள்ளது. எனவே, அவருக்குட் தேவையான சிகிச்சை அளித்து, அவர் இயல்பு நிலைக்குத் திரும்பி வர 6 முதல் 8 வாரங்கள் வரை ஆகும். தற்போது அவர் எலும்பு முறிவு, மயக்கவியல், பொது மருத்துவம் மற்றும் வலி நிவாரண மருத்துவம் உள்ளிட்ட நிபுணர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது. அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரேவந்த் ரெட்டி தலைமையில் 11 அமைச்சர்கள்.. யார் யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு?