டெல்லி: மதுபான கொள்கை திருத்தத்தில் முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும், ஏறத்தாழ 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்து உள்ளதாகவும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்தது.
தொடர் விசாரணையை அடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணீஷ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவுக்குத் தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு மதுபான கொள்கை திருத்த ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கவிதாவுக்கு, அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து அவரிடம் ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் ஏழு மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திருப்தி அடையவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்.எல்.சி கவிதாவுக்கு, கடந்த 8ஆம் தேதி விசாரணை அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. இதற்குப் பதில் மனு அளித்த கவிதா, அவரது வீட்டில் வைத்து விசாரணை நடத்தக் கோரினார்.
இதை ஏற்க மறுத்த அமலாக்கத்துறை, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் வந்து ஆஜராகுமாறு தெரிவித்தது. பின்னர், நேரில் வர ஒப்புக் கொண்ட கவிதா, மார்ச் 16ம் தேதி ஆஜராவதாகப் பதில் தெரிவித்தார். இதை அமலாக்கத்துறை ஏற்க மறுத்ததை அடுத்து மார்ச் 11ம் தேதி நேரில் ஆஜராவதாக கவிதா தெரிவித்தார்.
இதை அமலாக்கத்துறை ஏற்றுக் கொண்டதை அடுத்து, இன்று அவர் விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறை கவிதாவைக் கைது செய்யத் திட்டமிட்டு உள்ளதாக அவரது கட்சி குற்றம் சாட்டிய நிலையில் அப்படி கைது நடவடிக்கை நடந்தால் அதை சட்ட ரீதியாக எதிர் கொள்வோம் எனத் தெரிவித்து உள்ளனர்.
டெல்லியில் உள்ள அவரது தந்தை கேசிஆர் வீட்டில் இருந்து புறப்பட்ட கவிதா, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். கவிதாவுடன் அவரது சகோதரரும் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் மூத்த தலைவருமான கே.டி.ராமாராவ் உடன் வந்தார். மேலும் அமலாக்கத்துறை அலுவலகம் முன் ஏராளமான கட்சித் தொண்டர்கள் திரண்டனர்.
மேலும் அமலாக்கத்துறை மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கட்சித் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். கவிதா வருகையை அடுத்து அமலாக்கத்துறை அலுவலகம் முன் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பிஆர்எஸ் கட்சி தொண்டர்கள் குவிந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க: கணவரின் சடலத்துடன் 5 நாட்கள் குடும்பம் நடத்திய பெண் - மனநலன் குன்றிய பெண் மீட்பு!