நாகர்கர்னூல் : தெலங்கானா மாநிலம் வனப்பர்த்தி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வெங்கடேஷ் ஒரு நிலம் விஷயமாக வெளியே சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து வெங்கடேஷின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், நாகர்கர்னூல் பகுதியைச் சேர்ந்த ரமதி சத்தியநாராயணா என்ற சத்தியம் யாதவை தான் வெங்கடேஷ் கடைசியாக சந்தித்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். விசாரணையின் போது சத்தியம் யாதவ் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மாந்திரீக ரீதியிலான பூஜைகளை மேற்கொள்ளும் நபரான சத்தியம் யாதவ், பூமிக்கு அடியில் மறைந்து உள்ள பொக்கிஷங்களை தேடி அலைவதாக கூறப்படுகிறது.
அந்த பொக்கிஷங்களை அடைய வேண்டி கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 10க்கும் மேற்பட்டோரை பலி கொடுத்ததாகவும் போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர். பில்லி சூனியம் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடும் சத்தியம் யாதவ், பூமிக்கு அடியில் மறைந்து உள்ள பொக்கிஷங்களை அடைய தன்னை நிலத் தரகராக மற்றவர்களிடம் அடையாளப்படுத்தி உள்ளார்.
எந்தெந்த நிலங்களில் பொக்கிஷங்கள் மறைந்து இருக்கலாம் சத்தியம் யாதவ் நம்புகிறாரோ அந்த இடங்களை விற்பது போல் பேசி, அவர்களை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பணம் பறிப்பதையும், பில்லி சூனியம் வைப்பதாக பயமுறுத்தியும், அவர்களை கட்டாயப்படுத்தி விஷம் கலந்த எருமை பாலை குடிக்க வைத்து கொலை செய்வதையும் வழக்கமாக கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்படி இறப்பவர்கள் தலையில் கல்லை போட்டும், முகத்தில் ஆசிட் அமிலத்தை ஊற்றியும் கொலை செய்து உடல் உறுப்புகளை வெட்டி பூஜை செய்வதை சத்தியம் யாதவ் வழக்கமாக கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இது போன்று 10 பேரை சத்தியம் யாதவ் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர்கள் கர்நாடக மாநிலத்தின் கல்வகுர்த்தி, நாகர்கர்னூல், பாலகனூர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தின் பெத்தவடுகூர் மலைத்தொடர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பெரும்பாலானோர் வனப்பர்த்தி மற்றும் நாகர்கர்னூல் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் வெங்கடேஷுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், பூமிக்கு அடியில் இருக்கும் பொக்கிஷங்களை எடுத்துத் தருவதாக கூறி சத்தியம் யாதவ் பணம் பெற்றதாக தெரிகிறது.
மேலும், பொக்கிஷங்களை முழுமையாக பெற மூன்று கர்ப்பிணி பெண்களை பலி கொடுக்க வேண்டும் என்றும் அதற்கு பயந்து வெங்கடேஷ் மறுப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு வெங்கடேஷை அழைத்துச் சென்ற சத்தியம் யாதவ், விஷம் கலந்த குடிக்க வைத்து கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து மயங்கி விழுந்த வெங்கடேஷின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து, முகத்தில் ஆசிட் அமிலத்தை ஊற்றியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கடந்த 2020 முதல் 10 பேரை தொடர் கொலை செய்து வந்த சத்தியம் யாதவ், வெங்கடேஷ் கொலை வழக்கில் போலீசாரிடம் சிக்கி உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சத்தியம் யாதவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், நீதிமன்ற அனுமதிக்கு பின்னர் பல்வேறு வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராஜினாமா! பாஜகவில் இணையத் திட்டம்?