புதுச்சேரியில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் துணைநிலை ஆளுநராக (பொறுப்பு) இன்று பதவியேற்றுக்கொண்டார்.
காலை 9 மணிக்கு புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் (ராஜ் நிவாஸ்) அவர் பதவி ஏற்றார். அவருக்குச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் செய்துவைத்தார்.
புதுச்சேரியின் நான்காவது பெண் துணைநிலை ஆளுநராக தமிழிசை பதவி ஏற்கும் விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், இதில் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், பாஜக நியமன உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தெலங்கானா ஆளுநரும், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, நேற்று புதுச்சேரி வந்த தமிழிசைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரியில் இதுவரை நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பேரவையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி 14 இடங்கள், எதிர்க்கட்சி கூட்டணி 14 இடங்கள் என இரண்டும் சம பலத்தில் உள்ளன.
இதனால் அறுதிப்பெரும்பான்மைக்குத் தேவையான 15 இடங்களுக்கும் குறைவாக காங்கிரஸ் இருப்பதால் ஆட்சியில் நீடிப்பதில் ஆபத்து ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தமிழிசை ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளது புதுச்சேரி அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழிசை தமிழில் பதவியேற்றுக்கொண்டார். ஆளுநராகப் பதவியேற்கும் ஒருவர் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வது இதுவே முதல்முறையாகும். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் நபர் தமிழிசை சவுந்தரராஜன் என்பது கூடுதல் செய்தி.