புதுச்சேரி: இந்திய விமானப்படையின் சார்பாக 1971இல் பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்று ஐம்பதாவது ஆண்டு நினைவு தினம், நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினம், தடுப்பூசி ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றை முன்வைத்து இந்திய விமான படை வீரர்கள் ஒரு நாளைக்கு 100 கிலோ மீட்டர் தூரம் என விழிப்புணர்வு சைக்கிள் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.
இந்த சைக்கிள் பயணத்தை புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் திட்டம்
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, “புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் முடியவில்லை. இப்போது அக்டோபர் 5ஆம் தேதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்.
இத்திட்டம் வெற்றிபெற வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போடாவிட்டால், சான்றிதழ் இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
அரசின் சலுகைகளைப் பெற முடியாத நிலை ஏற்படும். மாணவர்கள் தடுப்பூசி போடாவிட்டால் தேர்வு செல்ல முடியாது. அரசின் சலுகைகள், திட்டங்களை பெற முடியாது. தீபாவளி போன்ற பண்டிகைக் காலத்தில் அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களை பெற முடியாத சூழல் ஏற்படும்.
தடுப்பூசி போடாதவர்கள் கணக்கெடுப்பு
புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் பலர் தடுப்பூசி போட்டு உள்ளனர். 18 வயதை கடந்த மாணவர்கள் தேர்வுக்கு செல்ல வேண்டும் என்றால் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
60 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்களை காப்பது அரசின் கடமை. அனைத்து அரசு துறைகளும் தடுப்பூசி போடாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு கட்டாயப்படுத்துவது கரோனா கட்டுப்படுத்துவதற்காக தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கே.சி.வீரமணி வீட்டில் பணம், நகை, ஆவணங்கள் பறிமுதல்