சென்னை: ஜி20 அமைப்பின், 2022 - 23ஆம் ஆண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து நாடு முழுதும் 50 நகரங்களில் பல்வேறு துறைகளுடன் இணைந்து கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில் இன்று(ஜன.31) முதல் பிப். 2ஆம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு கல்வித் துறை சார்ந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.
முதல் நாளில், 'கல்வியில் மின்னணு தொழில்நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பில், மூன்று அமர்வுகளாக கருத்தரங்கம் நடக்கிறது. இதில், திறன் மேம்பாடு குறித்த அமர்வில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத்துறை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டார். தமிழ்நாடு அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் திறன்மேம்பாட்டு பயிற்சி குறித்து இன்னசென்ட் திவ்யா பேசினார்.
அவர் கூறியதாவது, "தமிழ்நாடு மாணவர்கள் இடையே ஆங்கிலத் திறனை அதிகரிப்பதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசு திட்டங்களைத் தீட்டி வருகிறது. இதன்மூலம் உலக நாடுகளில் உள்ள மாணவர்களுடன் போட்டி போட முடியும். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஒரு வருடத்தில் 15 லட்சம் மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கிறோம்.
முன்னணி நிறுவனங்கள் மூலம் செய்முறை பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம். பள்ளி, கல்லூரி, இடைநிற்றல் மாணவர்கள், வேலை செய்து கொண்டிருப்பவர்கள், மகளிர் போன்றவர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் (விண்ணப்பிக்க: https://www.tnskill.tn.gov.in/).
உயர்கல்வி பயின்று வரும் மாணவர்கள், தொழில் முனைவோர் ஆவதற்கான முயற்சிகளை தமிழ்நாடு வழிகாட்டி, ஸ்டார்ட்அப் தமிழ்நாடு, நான் முதல்வன் போன்ற திட்டங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறோம். இதன்மூலம் முதல் நாளிலிருந்தே மாணவர்களை தொழில் சார்ந்த திறனுடையவர்களாக உருவாக்குகிறோம்.
பொறியியல், தொழிற்கல்வி மட்டுமேயல்லாது, கலை அறிவியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்குகிறோம். மாணவர்களுக்கு பயிற்சியுடன் வேலைவாய்ப்பை தொழில் நிறுவனங்களில் வழங்குவதன் மூலம், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான திறன் சார்ந்த மாணவர்களாக மாற்றுகிறோம்.
அனைத்து ஆசிரியர்களும் இந்த பயிற்சியை மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்றார் போல மேம்படுத்துகிறோம். நிறுவனங்களுடன் தொடர் இணைப்பில் உள்ள அரசு, வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக மாணவர்களிடம் கொண்டு சேர்த்து, மாணவர்களை தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றார் போல உருவாக்குகிறோம்.
வரும் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு மேலும் திறன் சார்ந்த பயிற்சிகளை அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பாடத் திட்டத்துடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!