ராஞ்சி (ஜார்க்கண்ட்): ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனக் கல்லூரியில் (RIMS) தமிழ்நாடு மாணவர் டாக்டர் மதன்குமார் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஆர்.ஐ.எம்.எஸ் (RIMS) கல்லூரியில் எரிந்த நிலையில் உடல் ஒன்று இருப்பதாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, உடல் யார் உடையது என்று காவல் துறையினர் விசாரணை செய்த போது அந்த உடல் மருத்துவம் மற்றும் தடயவியல் துறை இரண்டாம் ஆண்டு படித்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் மதன்குமார் உடையது என அவரது நண்பர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சதர் துணை காவல் கண்காணிப்பாளர் பிரபாத் ரஞ்சன் தர்பார் கூறும் போது, "தற்போது, எரிந்த நிலையில் காணப்பட்ட உடல் மருத்துவம் மற்றும் தடயவியல் துறை இரண்டாம் ஆண்டு படிக்கும் டாக்டர் மதன்குமார் என்றும், இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து தடயவியல் துறை மற்றும் மோப்ப நாய்கள் கொண்ட குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டுகிறது. அதில், சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும், அடுத்த கட்ட விசாரணை உடனடியாக தொடங்கப்படும்." என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வரி ஏய்ப்பு செய்ய திட்டம்.. அரசுக்கு சொந்தம் என கணினி உதிரிபாகங்கள் கடத்தல் முயற்சி! தூத்துக்குடி துறைமுகத்தில் சிக்கிய கண்டெய்னர்!
இச்சம்பவம் காலை 5.40 மணிக்கு நடைபெற்றதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. காலை 5 மணி முதல் விடுதி அறையில் டாக்டர் மதன்குமாரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியாக 5.40 மணிக்கு மைதானத்தின் மேற்கூரையில் ஏதோ விழுவது போன்று சத்தம் கேட்க சக விடுதி மாணவர்கள் சென்று பார்த்த போது எரித்த நிலையில் உடல் ஒன்று இருந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் பரியாத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பரியாத்து காவல் துறையினர், டாக்டர் மதன்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் காவல் துறையினரால் டாக்டர் மதன்குமார் அறையில் இருந்து அவருடைய மொபைல் மற்றும் இதர பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மதன்குமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ராஞ்சி விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பரியாத்து காவல்நிலைய அலுவலர் ஈடிவி பாரத்துக்கு அளித்த தகவலின்படி, எஞ்சின் ஆயில் மாணவர் மதன்குமாரின் உடலில் ஊற்றப்பட்ட நிலையில் காலி குப்பிகள் ஏதும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் மாணவரின் தொலைபேசியை கைப்பற்றி அவருக்கு, கடைசியாக வந்த அழைப்புகளையும் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்த 6 பேர் கைது.. நெல்லையில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!