பீகார்(பாட்னா): தனியார் மருத்துவமனையில் 23 பெண்களுக்கு மயக்க மருந்து அளிக்காமல் அறுவை சிகிச்சை செய்தது தொடர்பான விவகாரத்தில் க கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, தேசிய பெண்கள் ஆணையம் பீகார் தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த புதன்கிழமை(நவ.16) ஒரு பெண் தனக்கு மயக்க மருந்தே அளிக்கப்படாமல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாக புகார் அளித்தார்.
மேலும், 30 பெண்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதில் பல பெண்கள் வலியில் கதறிய சப்தம் கேட்டு பீதியடைந்த 7 பெண்கள் மருத்துவமனையை விட்டே ஓட்டம் பிடித்துவிட்ட நிலையில்,ஏனைய 23 பெண்களுக்கு இதே முறையில் கொடூரமாக அறுவை சிகிச்சையளிக்கப்பட்டதாக அந்த பெண் குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பிரதிமா கூறுகையில், “நாங்கள் வலியில் கதறிய போது, எங்கள் கை, கால்களை மருத்துவமனை ஊழியர்களும், உதவியாளர்களும் பிடித்துக்கொண்டனர்” என கூறினார். இந்த அலட்சிய செயல் குறித்து எதிர்ப்பு குரல்கள் எழுந்த நிலையில், அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அமர்நாத் ஜா நேற்று(நவ.17) இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை தொடங்கினார். இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை நாங்கள் தொடங்கியுள்ளோம். மேலும், இந்தக் குரூரச் சம்பவத்திற்கு காரணமான என்.ஜி.ஓ அமைப்பிடமும் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளோம். ஆரம்பகட்ட விசாரணையில் அந்த என்.ஜி.ஓ மனிதத்தன்மையற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது” என தெரிவித்தார். கடந்த 2012ஆம் ஆண்டு 53 அராரியா மாவட்டத்தில் 53 பெண்களுக்கு மயக்க மருந்து அளிக்காமல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த வழக்கில் மூன்று மருத்துவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாரத் ஜோடோ யாத்திரைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை!