சூரத் : பிரதமர் மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தின் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், கோலாரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டார். “நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்க முடியும்? எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற இணை பெயரோடு இருக்க முடியும்?” என ராகுல் காந்தி பேசினார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தார். பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என சூரத் நீதிமன்றம் அறிவித்தது. மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கொள்காட்டி மக்களவை செயலகம் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் அவர் தங்கி இருந்த அரசு வீட்டை காலி செய்யுமாறு மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியது. வீட்டை காலி செய்வதாக ஒப்புக் கொண்டு ராகுல் காந்தியும் பதில் கடிதம் எழுதினார்.
பதவி நீக்கத்தை தொடர்ந்து கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர்களை சந்தித்த அவர், 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மேற்கொள்ள உள்ள யுக்திகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கடந்த 3 ஆம் தேதி சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். ராகுல் காந்தி தரப்பில் 2 மனுக்கள் செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
ஒன்று தீர்ப்புக்கு தடை விதிப்பது மற்றொன்று மேல்முறையிடு முடியும் வரை தண்டனைக்கு தடை விதிப்பது என இரு மனுக்களை ராகுல் காந்தியின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கில் விசாரணை நியாயமாக இல்லை என்றும், அதிகபட்ச தண்டனை தேவை இல்லை என்றும் ராகுல் காந்தி தரப்பில் வாதிடப்பட்டது.
விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை இடை நிறுத்தி வைக்காவிட்டால், தனது நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்று அதிகப்படியான தண்டனை என்பது இந்த விஷயத்தில் சட்டத்திற்கு முரணானது என்றும், தற்போதைய வழக்கில் அரசியல் மேலோட்டங்களைக் கொண்ட தேவையற்றது என்றும் ராகுல் காந்தி தரப்பில் கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று (ஏப் 20) இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்வதாக சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதேநேரம் பாட்னா நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் மோடி, ராகுல் காந்திக்கு எதிராக இந்த வழக்கு தொடர்ந்து உள்ளார். கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அடுத்த அமர்வில் ராகுல் காந்தி ஆஜராகாவிட்டால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Yemen Stampede: ஏமன் நிதி உதவி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் - 85 பேர் பலி, 320 பேர் படுகாயம்!