புதுச்சேரிக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, புதுவை மாநகரில் உள்ள ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டிற்கு சென்று அங்கு பாரதியாரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
இதனையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 1.5 மெகா வாட் திறன் கொண்ட சூரிய சக்தி (சோலார்) மின்சார தயாரிப்பு நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
![குடியரசு துணைத் தலைவர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-02-vice-president-vengaiaa-tn10044_12092021122219_1209f_1631429539_900.jpg)
ஜிப்மர் கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், அலுவலர்கள், ஜிப்மர் இயக்குனர் ராஜேஷ் அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி சென்ற அவர் அங்கு ரூபாய் 7 கோடியே 67 லட்சம் செலவில் சூரிய மின்சக்தி திட்டம் அமைக்கப்பட உள்ள திட்டத்தினை தொடங்கிவைத்தார்.
விழாவில் பேசிய அவர், “ சூரிய மின்சக்தி திட்டததை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கரோனா சமயத்தில் ஜிப்மர், புதுவை மற்றும் அண்டை மாநில மக்களுக்கும் பேருதவி செய்துள்ளது. பிரெஞ்சு கட்டட கலைகளை கொண்ட மாநகரம் புதுச்சேரி உலகத்தில் மிகவும் அழகான நகரம்.
இந்திய அளவில் மருத்துவ நிறுவனங்களில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் மிகப்பெரிய சூரிய ஒளி மூலம் மின்சக்தி உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் சூரிய ஒளி மூலம் மின்சக்தி உருவாக்கும் திட்டம் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது நம் அனைவரைக்கும் மிகவும் சேமிப்பு ஆகும்.
![குடியரசு துணைத் தலைவர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-02-vice-president-vengaiaa-tn10044_12092021122219_1209f_1631429539_653.jpg)
இதற்கு மானியமும் அரசு சார்பாக அளிக்கப்படுகிறது. சூரிய ஒளி, இயற்கை காற்று போன்றவை இதுபோன்ற தொற்று சமயத்தில் மிக மிக முக்கிமானது .நகர பகுதிகளில் மக்கள் நெருக்கடியான இடங்களில் வசிக்கின்றனர். நகர பகுதிகளில்தான் அதிக தொற்று ஏற்படுகிறது. கவனமாக இருக்க வேண்டும்” என்றார்
முன்னதாக புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையத்திற்கு வந்த த வெங்கையா நாயுடுவை, மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வரவேற்றனர்.