ராஜஷ்தானின் கெரில் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது பெண். இவர் தனது கணவருடன் வசித்துவருகிறார். தம்பதிக்கிடையே கருத்து வேறுபாட்டால் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவருவதாகக் கூறபடுகிறது.
இதனால், பெண் விவாகரத்து செய்துகொள்ள முடிவுசெய்தார். இதனடிப்படையில், அருகில் உள்ள கெரில் காவல் நிலையதிற்குச் சென்று புகார் அளித்தார். அங்கு காவல் உதவி ஆய்வாளர் பாரத் சிங் பெண்ணின் புகாரை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து, பெண்ணுக்கு உதவுவதாகக் கூறி அவரை அடிக்கடி காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளார். இதனை நம்பிச் சென்ற பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் பாரத் சிங்.
பின்னர், பெண் காவல் உதவி ஆய்வாளர் மீது புகார் தெரிவித்துள்ளார். விசாரணையில், ’’கடந்த மார்ச் 2, 3, 4 ஆகிய நாள்களில் தொடர்ந்து பாரத் சிங் பாலியல் வன்புணர்வு செய்ததாகப் பெண் கூறினார்" என்பது தெரியவந்தது.
புகாரின் அடிப்படையில், ஜெய்ப்பூர் மண்டல காவல் துறைத் தலைவர் (ஐஜி) ஹவா சிங் குமாரியா, அல்வார் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) தேஜஸ்வினிகவுதம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து. அங்கு விசாரணை மேற்கொண்டதில் பாரத் சிங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பின்னர், பாரத் சிங் கைதுசெய்யப்பட்டார். வழக்குப்பதிவு செய்து இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. தற்போது, பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.