கலிஃபோர்னியா: கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருப்பதை வெப்ப அலை என்று கூறுவார்கள். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த வெப்ப அலைகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இந்த நிலையில், இங்கிலாந்தின் கேம்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரமித் டெப்நாத் என்ற ஆராய்ச்சியாளர் தனது குழுவுடன் சேர்ந்து, இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்ப அலைகள், இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் (SDGs) முன்னேற்றத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வறிக்கை PLOS Climate என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் வெப்ப குறியீட்டை (Heat index -HI), காலநிலைப் பாதிப்பு குறியீட்டுடன் (climate vulnerability index (CVI) ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்தனர். சமூகப் பொருளாதாரம், வாழ்வாதாரம், உயிர் இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஒப்பிட்டு மதிப்பீடு செய்தனர்.
குறிப்பாக கடந்த 20 ஆண்டுகள் காலத்தில், அதாவது 2001 முதல் 2021ஆம் ஆண்டு வரையில், இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும், அதே காலகட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட சமூக பொருளாதார தாக்கங்களையும் ஆய்வுசெய்தனர்.
இதில், இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றத்தில் வெப்ப அலைகள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. வறுமை ஒழித்தல், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல், வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்தல் உள்ளிட்ட ஐ.நா.வின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கி இந்தியா முன்னேறுவதை காலநிலை மாற்றம் தடுக்கக்கூடும் எனத் தெரியவந்துள்ளது.
இதில் இந்தியாவின் வெப்ப குறியீட்டை ஆய்வு செய்தபோது, நாட்டில் 90 சதவீத பகுதிகள் வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. 2001 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலநிலை பாதிப்பு குறியீட்டின்படி, நாட்டில் 20 சதவீத பகுதிகள் காலநிலை மாற்றத்தால் மோசமாக பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாகவும், குறிப்பாக டெல்லியில் வெப்ப அலைகளின் தாக்கம் மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, "இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை வெப்ப அலைகள் பாதிக்கின்றன. இந்தியாவில் வெப்ப அலைகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கக்கூடும். அதனால், காலநிலை வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், நாட்டின் காலநிலை பாதிப்பை மதிப்பிடுவதற்கான அளவீடுகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்.
இந்தியாவில் வெப்ப அலைகள் மிகவும் தீவிரமடைந்து வருகின்றன. இது நாட்டில் 80 சதவீத மக்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இவை தற்போதைய காலநிலை பாதிப்பு மதிப்பீட்டில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் உள்ளது. இந்த தாக்கத்தை உடனடியாக கவனிக்கவில்லை என்றால், நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய இந்தியாவின் முன்னேற்றத்தை காலநிலை மாற்றம் குறைக்கும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: India Corona : புது உச்சம் தொட்ட கரோனா பரவல் - ஊரடங்கு கட்டுப்பாடு?