
மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் இணையின் நிச்சயதார்த்த விழா மும்பை அன்டிலா இல்லத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட வீடாக கூறப்படும் அண்டிலா மாளிகையில் முக்கிய விருந்தினர் முன்னிலையில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் இணையின் 2-வது நிச்சயதார்த்தம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஆனந்த் அம்பானியைத் திருமணம் செய்து கொள்ளும் ராதிகா மெர்ச்சன்ட்டின் தந்தை விரென் மெர்ச்சன்ட் என்கோர் ஹெல்த்கேர் லிமிடட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். மேலும் அம்பானி குடும்பத்தைப் போன்று விரென் மெர்ச்சன்ட் குடும்பமும் தொழிலதிபர் குடும்பம் ஆகும்.

நிச்சயதார்த்த விழாவை முன்னிட்டு அன்டிலா இல்லாம் இரவையே பகலாக மாற்றும் வகையிலான ஒளி விளக்கில் மின்னியது. ஆட்டம், பாட்டம் என அம்பானி குடும்பத்தினர் நிச்சயதார்த்த விழாவை கொண்டாடினர். விழாவிற்கு பாலிவுட் நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது.


ஐஸ்வர்யா ராய், தன் மகள் ஆராத்யாவுடன் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டார். மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டார். ஆலியா பட்டின் பாடலுக்கு திருமண ஜோடி உள்பட அம்பானியின் குடும்பம் முழுவதும் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பயங்கர வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் தனது சகோதரியின் மகளுடன் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டார். மேலும் அக்ஷய் குமார், நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூர், முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மேலும் நிச்சயதார்த்த விழாவில் பாடகி ஸ்ரேயா கோஷல், ஜான் ஆபிரகாம், நீது கபூர், அர்ஜூன் கபூர், போனி கபூர் உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் ரன்வீர் சிங்கும் அவரது மனைவியும் நடிகையுமான தீபிகா படுகோன், நடிகை அனன்யா பாண்டே, கரண் ஜோஹர் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.



மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்ரே, நடிகர் ஷாருக்கானின் மனைவி கவுரி கான், மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: இயக்குநர் லீனா மணிமேகலையை கைது செய்யத் தடை; உச்ச நீதிமன்றம் உத்தரவு