இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான போரில் தற்போது கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசி மருத்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது. இந்த தடுப்பூசி இந்திய சந்தைகளில் அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரும் என்றும், இந்த தடுப்பூசி ஜூலை மாதம் முதல் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 995 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என இந்தியாவில் தடுப்பூசியை தயாரிக்கும் டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால், அதன் விற்பனை விலை அதிகரித்துள்ளது. ஒரு டோஸ் 948 ரூபாய்க்கு விற்பனை ஆகவிருந்த நிலையில், ஜிஎஸ்டி வரியின்படி 47 ரூபாய் அதிகரித்து, 995 ரூபாய்க்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி விற்பனை செய்யப்படும். இந்த தடுப்பூசியின் வரவு, நாட்டில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஹைதராபாததில் இன்று (மே 14) செலுத்தப்பட்டது.