உன்னாவ் : உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஜன.13 வியாழக்கிழமை வெளியிட்டார். அதில், உன்னாவ் சதர் தொகுதியில் உன்னாவ் பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஆஷா சிங் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியுள்ளது.
2017ஆம் ஆண்டு நடந்த உன்னாவ் பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் 17வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.
இந்நிலையில் குல்தீப் செங்காரின் மகள் ஐஸ்வர்யா பேசும் வீடியோ நேற்று (ஜன.15) சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், “பிரியங்கா காந்தி அவர்களே, நீங்கள் எடுத்த இந்த அரசியல் நடவடிக்கை நல்லதாக இருக்கலாம், ஆனால் எனக்கு அரசியல் தெரியாது.
நீங்கள் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் ஆஷா சிங் மீது மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியலை போலியாக தயாரித்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இவர்களை உன்னாவ் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சமூகம் உங்களை மன்னிக்காது. மார்ச் 10ஆம் தேதி இதன் முடிவைப் பார்ப்பீர்கள். உன்னாவ் மக்களின் ஆசீர்வாதம் என்னுடன் இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.
உன்னாவ் பாலியல் வன்புணர்வு வழக்கில், குல்தீப் செங்கார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'உன்னாவ் அம்மா'வுக்கு முழு ஆதரவு- அகிலேஷ் யாதவ்!