உத்தரப் பிரதேசம்: சகோதரத்துவத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பண்டிகையான ரக்ஷா பந்தன் நேற்று (ஆக.22) நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இப்பண்டிகை நாளில் உடன் பிறந்த, உடன் பிறவா சகோதரிகள் பலரும் ராக்கி கட்டியும் இனிப்புகள் பரிமாறியும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழ்வர்.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் சகோதரிகள் இருவர் தங்கள் சகோதரனுக்கு தங்களது கல்லீரலின் ஒரு பகுதியை ரக்ஷா பந்தன் நாளான நேற்று வழங்கி அவரது உயிரையே காப்பாற்றியுள்ளது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
தம்பியின் உயிர்காத்த சகோதரிகள்
உத்தரப் பிரதேசம், படவுனைச் சேர்ந்த அக்ஷத் குப்தா அரிய வகை கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தொடர்ந்து, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஆறு வாரங்களுக்குப் பிறகு உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், மீண்டும் அவர் ஜூலை 6ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து படிப்படியாக அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. சுமார் 10 கிலோ வரை எடை கூடிய அக்ஷய், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடனடியாக கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.
ராக்கிக்கு பதிலாக கல்லீரல்...
இதனையடுத்து கல்லீரல் தானம் வேண்டி அவரது பெற்றோர் திணறிய நிலையில், விரைந்து செயல்பட்ட அவரது சகோதரிகள் பிரெர்னா, நேஹா இருவரும் தங்களது கல்லீரலின் பாகங்களை தங்கள் தம்பி அக்ஷய்க்கு வழங்கி காப்பாற்றியுள்ளனர்.
குறிப்பாக இத்தாலியில் தங்கியிருந்த நேஹா உடனடியாக இந்தியா திரும்பி தன் கல்லீரலின் ஒரு பாகத்தை வழங்கியுள்ளார். அக்ஷய் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரக்ஷா பந்தன் நாளில் இரண்டு சகோதரிகள் தங்களது கல்லீரல் பகுதிகளை வழங்கி, தங்கள் உடன் பிறந்த தம்பியின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இதையும் படிங்க: அயோத்தி செல்லும் சாலைக்கு கல்யாண் சிங் பெயர்!