டெல்லி: டெல்லி ஷியா மத்திய வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவரான வாசிம் ரிஸ்வி இஸ்லாமியர் அல்ல, அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஷியா வக்ஃப் கவுன்சில் உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளனர்.
அகில இந்திய ஷியா கவுன்சில் கூட்டம் வியாழக்கிழமை (மார்ச் 18) நடந்தது. இதில், வாசிம் ரிஸ்வி-யை "நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரி" என்று அழைத்தனர். தொடர்ந்து, குர்ஆனைப் போன்ற ஒரு புனித புத்தகத்தை அவமதித்ததன் மூலம் வாசிம் ரிஸ்வி இஸ்லாத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவர் என்றும், இனி ஒரு முஸ்லீமாக கருதப்படக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
மேலும் அவரது படைப்புகள் இஸ்லாமியரின் படைப்பாக கருதப்படாது என்றும் ஷியா முஸ்லிம் மதத் தலைவர்கள் கூறினார்கள். இது குறித்து மத தலைவர் ஒருவர் கூறுகையில், “குர்ஆனில் உள்ள 26 வசனங்களை நீக்க வலியுறுத்தி வாஷிம் ரிஸ்வி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதை நாங்கள் அறிவோம். அவருக்கு அபராதம் விதிக்கும் தண்டனையை நான் நிராகரித்துவிட்டேன்” என்றார்.